கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் சிரமப்பட்டுவந்தனர். இந்த நிலையில் இன்று (அக். 15) முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் இன்று பூஜை போடப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் கிருமிநாசினி தெளித்து, திரையரங்குகளுக்குள் நுழையும் மக்கள் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு அறுவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, காசியாபாத், குருகிராம் போன்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் இயங்கும் வகையில், திரையரங்குகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் திறப்பது குறித்து பி.வி.ஆர். நிறுவன தரப்பு கூறுகையில், "திரையரங்கத்திற்கு வரும் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் உள்ளே நுழைபவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும். மேலும் குளிர்சாதன கருவி மக்களின் பாதுகாப்பிற்காக 24 டிகிரி முதல் 30 டிகிரி வரை இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருக்கும் மாஸ் நடிகர்களின் திரைப்படம், திரையரங்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் - விஜய் சேதுபதிக்கு தாமரை கடிதம்!