சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்த சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்க உறுப்பினர்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொருளாளர் ஜெயந்த், “சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவரான ரவிவர்மா என்பவர் சங்கத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 13ஆம் தேதி எனக்கு வங்கி கணக்கிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ந்து போய் வங்கியில் சென்று கேட்டபோது, தலைவர் ரவிவர்மா வந்து பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தனர். வங்கியில் உள்ள சங்க பணத்தை பொருளாளர், உறுப்பினர்களுடன் கேட்காமல் தன்னிச்சையாக ரவிவர்மா செயல்பட்டு தொடர்ந்து கையாடல் செய்து வருகிறார்.
இதேபோல் கடந்த வருடம் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது ஏஜெண்டிடம் ரூபாய் ஐந்து லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்று ரவிவர்மா ஏமாற்றினார்” எனக் கூறினார்.
மேலும், “தொடர்ந்து தலைவர் ரவிவர்மா சங்க வங்கி கணக்கிலிருந்து பல லட்ச ரூபாய் பணத்தை உறுப்பினர்களுக்கு தெரியாமல் கையாடல் செய்து வந்ததால் அவரை தலைவர் பதிவியிலிருந்து நீக்கக்கோரி பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் புகார் அளித்தோம். ஆனால் தொடர்ந்து ரவிவர்மாவே தலைவராக நீடிக்க ஆர்.கே. செல்வமணி ஓப்புதல் அளித்துள்ளார்.
ஆனால், தற்போது மீண்டும் 80 ஆயிரம் ரூபாயை ரவிவர்மா கையாடல் செய்ததால் உடனடியாக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்த ரவிவர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பாக வடபழனி உதவி ஆணையரிடம் புகார் அளித்து, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம்” என்றார்.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்