'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காப்பான்'. இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தியப் பிரதமராக நடிக்கும் மோகன்லாலுக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அலுவலராக சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் 2014-2016ஆம் ஆண்டுகளில் 'சரவெடி' என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை, இயக்குநர் கே.வி. ஆனந்திடம் கூறியிருந்தேன். அந்தக் கதையை கேட்ட கே.வி. ஆனந்த் பின்னர் வாய்ப்புகள் தருவதாக கூறியிருந்தார்.
ஆனால் தற்போது தன்னுடைய கதையை 'காப்பான்' என்ற பெயரில் படமாக இயக்கி இம்மாதம் வெளியிட உள்ளனர். எனவே இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கே.வி. ஆனந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கே.வி. ஆனந்த அடையாளம் தெரியாத எந்த நபரிடமும் கதை விவாதத்தில் ஈடுபட்டதில்லை எனவும் மனுதாரரின் கதையும் காப்பான் படக்கதையும் ஒரே மாதிரியாக இருப்பதாக கூறுவதும் ஏற்புடையது அல்ல என வாதிட்டார்.
படத்தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில், இரு கதையும் ஒரே மாதிரியாவை அல்ல, உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.