18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ஆப்பிள்ஸ், ககுவூ வாடிஸ், ஆய்டா, லிசன், தி ஸ்லீப் வாக்கர்ஸ், ஆக்னெஸ் ஜாய், ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட் மற்றும் ரன்னிங் டூ தி ஸ்கை உள்ளிட்ட திரைப்படங்கள் 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.
இதில் கேன்ஸ் திரைப்பட விழா, பெர்லின் திரைப்பட விழா, ஈரான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, பூசான் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற திரைப்படங்களும் திரையிடப்பட்டன.
நாடுகள் வரிசையில், ஈரான் 11, பிரான்ஸ் 6, ஹங்கேரி 4, சிலி 2, இந்திய பனோரமாவில் திரையிடப்பட்ட படங்களும், தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்பட்டன.
தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் 13 திரைப்படங்கள் கலந்துகொண்டன. இந்தப் போட்டிக்காக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதில், லேபர், கல்தா, சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், பாஸ்வேர்ட், காட் ஃபாதர், தி மஸ்கிடோ பிலாசபி, சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம் மற்றும் கன்னிமாடம் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது. இதில், ‘வெற்றி துரைசாமி’ இயக்கிய “என்றாவது ஒரு நாள்” படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இப்படத்திற்கு முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்திற்கு ஒருலட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
அடுத்தப் படமாக ‘வைகறை பாலனின்’, “சியான்கள்” படம் தேர்வு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் கரிகாலனுக்கும், இயக்குனர் வைகறை பாலனுக்கும், தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
க/பெ ரணசிங்கம் படத்திற்காக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு, சிறந்த நடிப்பு பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டாக்டர் பட 'சோ பேபி' பாடல் வெளியானது!