குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்க ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.
சமீபத்தில், அந்த குழந்தைகளில், அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9 வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்கள் உடுத்த ஆசைப்படும் மிக உயர்ந்த ஆடை எது என்று கேட்கப்பட்டது. அவர்கள் விருப்பப்படி அந்த ஆடைகளை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு உடுத்தி அழகு பார்க்கப்பட்டது.
மேலும் சிறந்த ஒளிப்பதிவாளரை கொண்டு புகைப்படம் எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு நாட்காட்டியாக வடிவமைக்கப்பட்டு, அந்த நாட்காட்டியை அவர்களுக்கே பரிசாக நடிகர் ஆதி வழங்கினார். அதை பார்த்த குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன் பின் அந்த ஆடைகள் அவர்களுக்கே பரிசாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து அந்நிறுவனத்தினர் கூறுகையில், “தி லிட்டில் பாக்டரி (The little factory) துவங்கியதன் நோக்கம் நல்ல இதயங்களின் மனதில் புன்னகையையும் அன்பையும் பரப்புவதே ஆகும். தினமும் எண்ணற்ற அழகான சிறு இதயங்களை நாங்கள் சந்தித்து வருகிறோம். இந்த முறை ஆடை கொடுத்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், அவர்களின் அற்புத திறமைகள் வெளிக்கொண்டு வரப்பட்டது.
அவர்களின் கதை அனைவரையும் பிரமிக்க வைக்கும், வாழ்வின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை நம் கண்களில் கண்ணீர் வர செய்யும். அவர்கள் நம்பிக்கையை பாடமாக அளிக்கிறார்கள்.
குடிசைப் பகுதி என்பது குப்பைக்கூழங்களை கொட்டும் வெற்றுக் குழிகள் அல்ல. புனிதமான மனிதத்தைக் காணக்கூடிய உண்மையான சொர்க்கம் அவை. அவர்களது உணர்ச்சிமிக்க வார்த்தைகளும் ஒளிர்விடும் கண்களும் நாம் மதித்து கவனிக்கவேண்டியவை. இந்த போட்டோஷூட் குழந்தைகளை பெரும் வெளிச்சத்திற்கு அழைத்து வரும் அற்புதமான வாய்ப்பு. கீழ்மட்டத்தில் உள்ள குழந்தைகளை புகழ் வெளிச்சத்திற்குள் அழைத்து வருவது மகிழ்ச்சி. இவர்களுக்காக சிரத்தை எடுத்து ‘தி லிட்டில் பாக்டரி’ செயல்பட்டு வருகிறது” என்றனர்.
இதையும் படிங்க: காமதிபுரா இணையத்தொடர் ஏன் வெளியாகவில்லை? மீரா சோப்ரா விளக்கம்