சென்னை: ஒரு கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டார் என, பாஜக பிரமுகரும், பிரபல வில்லன் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா. ராமமூர்த்தி 'எர்த் மூவர்ஸ்' என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, சுமார் ரூ.13 கோடி வரை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு கொடுங்கையூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய ரூ.10 கோடி கடன் வேண்டும் என ராமமூர்த்தி கேட்டுள்ளார்.
அதற்கு கமலக்கண்ணன், ரூ.10 கோடி வாங்கித் தருவதாகக் கூறி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது ஆர்.கே. சுரேஷ், தனக்கு தெரிந்த தனியார் வங்கி மேலாளர் மூலம் கடன் பெற்று தருவதாகத் தம்பதியிடம் உறுதியளித்தார்.
அதற்கு கமிஷனாக ஒரு கோடி ரூபாய் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதை நம்பிய தம்பதியர், ரூ.93 லட்சத்தை சுரேஷின் வங்கி கணக்கிலும், ரூ.7 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆர்.கே.சுரேஷ், ராமமூர்த்தி, அவரது மனைவி வீனாவை வளசரவாக்கத்தில் உள்ள வங்கி மேலாளர் சக்திவேலிடம் அறிமுகப்படுத்தி வைத்து, வங்கி மேலாளர் முன்னிலையில் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்தும் வாங்கியுள்ளார்.
பின்னர், தம்பதியரை விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, நிரப்பப்படாத காசோலைகளில் கையெழுத்து வாங்கி, ரூ.10 கோடி கணக்கில் வரும் என, தம்பதியரிடம் உறுதியளித்தனர்.
தங்களது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வராததால், கமலக்கண்ணன், ஆர்.கே சுரேஷை தொடர்புக்கொண்டு கடன் குறித்து தம்பதியர் கேட்டபோது, ரூ.10 கோடிக்கான ஒரு மாத வட்டித் தொகையைத் தந்தால் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
மீண்டும் பணம் கொடுக்க விருப்பாத தம்பதியர், அதற்கு மறுப்பு தெரிவித்து முன் பணமாக கொடுத்த ஒரு கோடியை திருப்பிக் கேட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆர்.கே.சுரேஷ் இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் நடிகர் ஆர்.கே.சுரேஷ், தன்னுடைய வீட்டை தம்பதியருக்கு (ராமமூர்த்தி, வீனா) விற்பனை செய்ததாகப் பத்திரப்பதிவு செய்து, அந்த ஆவணங்களை கொண்டு வங்கியில் ரூ.2.5 கோடி கடன் பெற்று ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மன உளைச்சலில், ராமமூர்த்தி இறந்துவிட்டார். இந்த நிலையில், பணத்தை இழந்த வீனா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 29) புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”நடிகர் ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்து வைத்த கமலக்கண்ணன், எங்களைப் போல பலரையும் மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக, அவரை மத்திய குற்றப்பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆர்.கே.சுரேஷிடம் கேட்டபோது, என்னையும், மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். பல முறை காவல்துறையில் புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடிகர் ஆர்.கே சுரேஷ் பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தற்போது காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளேன்" என்றார்.
இப்புகார் தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷ் தரப்பில் கேட்டபோது, ”முழுக்க முழுக்க நம்பகத்தன்மையற்ற புகார். சம்பந்தப்பட்ட பெண் மோசடியில் ஈடுபடுபவர்.
எனக்கு பணம் தேவையெனில், வங்கியில் எனது வீட்டின் பத்திரத்தை வைத்து கடன் பெற்று கொள்ளப் போகிறேன்.
ஏன் எனது வீட்டை அவர்கள் பெயரில் மாற்றி, கடன் பெற வேண்டும். இதற்கு தகுந்த விளக்கத்தை அளிப்பேன். சட்டப்படி, இப்புகாரை சந்திப்பேன்" என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ்.
திரையுலகப் பயணத்தை, கடந்த 2012ஆம் ஆண்டு சாட்டை படத்தில் திரைப்பட விநியோகஸ்தராகத் தொடங்கிய ஆர்.கே.சுரேஷ், 2014ஆம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.
பல திரைப்படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து, கடந்த 2018ஆம் ஆண்டு பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் ஆர்.கே.சுரேஷ்.
தமிழில் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராக ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றிய அவர், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையுமே படிக்கலாமே:நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்த போலி செய்தி; ஆன்லைன் மூலம் புகார்!