2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்புகளை கொடுத்துள்ளது. கரோனா காரணமாக மிகப்பெரிய நடிகர்கள், கலைஞர்களை நம் தமிழ் சினிமா இழந்துள்ளது என்றே சொல்லலாம். அதன்படி இந்த ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தயாரிப்பாளர் கே.பாலு
சின்னதம்பி, உத்தமராசா, ஜல்லிக்கட்டு காளை போன்ற படங்களை தயாரித்தவர் கே.பாலு. தமிழ் சினிமாவின் வெற்றி தயாரிப்பாளரான இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி மாதம் 2 ஆம் தேதி உயிரிழந்தார்.
நடிகர் தீப்பெட்டி கணேசன்
நடிகர் கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஐந்து இளைஞர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்த அந்தப் படத்தில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை, ராஜபாட்டை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானார்.

நல்ல நடிகன் என்று பெயரெடுத்து வந்த கார்த்தி, சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்தார். இதையடுத்து திரை பிரபலங்கள் பலர் அவருக்கு உதவிய நிலையில், மார்ச் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நடிகர் விவேக்
நடிகர் விவேக்கின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஏப்ரல் 17 ஆம் தேதி உயிரிழந்தார். யாருமே எதிர்பார்த்திடாத விவேக்கின் திடீர் மறைவு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜனங்களின் கலைஞனாக வாழ்ந்துவந்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாததாக மாறியது. விவேக் இல்லை என்றாலும் அவரது நினைவாக ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.
இயக்குநர் கே.வி.ஆனந்த்
இந்த ஆண்டு தமிழ் சினிமா சந்தித்த மற்றும் ஒரு பேரிழப்பு இயக்குநர் கே.வி.ஆனந்தின் மறைவு. தான் இயக்கிய கனா கண்டேன், கோ, மாற்றான், அயன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து படைத்தார்.

இவர் படங்கள் இயக்குவது மட்டுமின்றி காதல் தேசம், முதல்வன், நேருக்கு நேர், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், ஏப்ரல் 30 தேதி மாரடைப்பால் காலமானார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்
கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன். புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகினர் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் மட்டுமல்லாமல், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் புனித் ராஜ்குமார். 29 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர், 1975 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்.
நெடுமுடி வேணு
மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நெடுமுடி வேணு. 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம், இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 11 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேணுவின் இழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஶ்ரீகாந்த்
1960களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தவர் மூத்த நடிகர் ஶ்ரீகாந்த். இவர் 1965 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின், 'வெண்ணிற ஆடை' திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதற்கு முன்பாக அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
நடிகர் நிதீஷ் வீரா

'பேரரசு', 'சிந்தனை செய்' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா. பின்னர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், மே மாதம் 17ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் பாண்டு

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கரோனா பாதிப்பு காரணமாக மே மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆனந்த கண்ணன்

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் நடித்திருந்தவர் ஆனந்த கண்ணன். 90 களில் பிறந்தவர்களுக்கு இவர் நன்றாக பரிட்சியம். புற்றுநோய் காரணமாக சிங்கப்பூரில் செட்டிலான அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் ஏப்ரல் 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இயக்குநர் தாமிரா

2010ஆம் ஆண்டு வெளியான ரெட்டச்சுழி படத்தை இயக்கியவர் தாமிரா. தனது முதல் படத்திலேயே கே. பாலச்சந்தர்- பாரதிராஜா ஆகியோரை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். இதனையடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து சமுத்திரக்கனியை வைத்து ஆண் தேவதை படத்தை இயக்கினார். இதற்கிடையில் தாமிராவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இவர் ஏப்ரல் 27 ஆம் தேதி உயிரிழந்தார்.
கவிஞர் பிறைசூடன்

திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியவர் பிறைசூடன். 5000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்.
பாடகர் மாணிக்க விநாயகம்

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி காலமானார். நாட்டுப்புற கலைஞரான இவர், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய பாடல்கள், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மறைவு இசை உலகத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
பேராண்மை, இயற்கை, புறம்போக்கு உள்ளிட்ட பொதுவுடைமையான படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ். பி. ஜனநாதன். இவர் கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து 'லாபம்' படத்தை இயக்கினார்.

படத்தின் எடிட்டிங் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மார்ச் 14 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் நினைவைப் போற்றும் வகையில் சமீபத்தில் அவரின் முழு உருவச்சிலை திறப்பு விழா சென்னை, திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது.
இதையும் படிங்க: Miss Universe - 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த பட்டம்