வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகையான கேட் பிளான்செட், கரோனா பீதியால் இங்கிலாந்திலுள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட இருந்தபோது தலையில் காயம் அடைந்தது பற்றி வலையொளி நிகழ்ச்சியொன்றில் விவரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்டுடன், வலையொளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை கேட் பிளான்செட். அப்போது கரோனா பீதியால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தபோது செய்த விஷயங்களை பற்றி உரையாடினார்.
அப்போது, “சங்கலி அறுக்கும் இயந்திரத்தை கையாளும்போது தலையில் அடிபட்டு சிறிது காயம் ஏற்பட்டது” என்றார். இதைக்கேட்ட கில்லார்ட், “இதுபோன்ற இயந்திரங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அதுவும் உங்களது தலை என்பது மிகவும் பிரபலமானது” என்று கூறினார்.
இதற்கிடையில், “எனது தோல்பட்டையில் வைத்து இயக்குவதற்கு பதிலாக தவறுதலாக அதை செலுத்தியதால்தான் காயம் ஏற்பட்டது” என்று பதிலளித்தார் பிளான்செட்.
தோர் படத்தில் ஹேலா என்ற கேரக்டரில் தலையில் வேர் இருப்பது போன்று வித்தியாமான தோற்றத்தில் தோன்றும் பிளான்செட்டுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதை குறிப்பிடும் விதமாகவே அவரது தலை பிரபலமாக இருப்பதாகக் கூறியுள்ளார் கில்லார்ட்.
தொடர்ந்து இந்த உரையாடலில், தனது ஐந்து வயது குழந்தைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து, ஆசிரியர்களின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
அத்துடன், கரோனா காலத்தில் தொடர்ந்து மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என்று கூறினார்.
சிறந்த நடிகை, துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற கேட் பிளான்செட் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், தி ஹாபிட் சீரிஸ், ஹவ் டூ டிரெய்ன் யுவர் டிராகன், ஓசன் எட்டு என பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.