இயக்குநர் ராஜ ராஜதுரை திரைக்கதை வசனம் எழுதி, புதுமுக நாயகன் பாசித்தை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'முதல் மனிதன்'. இதில் கதாநாயகிகளாக சான்ரா ரோஸ், ரோஷிணி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதனிடையே 'முதல் மனிதன்' திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டியோவில் இன்று (அக்.23) நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் ஆர்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர் போண்டா மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் ஆர்.வி உதயகுமார், "சாதியைப் பற்றி பேசுபவர்கள் குறைந்து விட்டார்கள். ஆனால் சினிமாவில்தான் சாதி பற்றி அதிக படம் எடுக்கப்படுகிறது. சாதி படங்களுக்குத் தேசிய விருதும் கொடுத்து விடுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் என ஒரு சிலர் சினிமாவில் பேசுகின்றனர். யாரும் சினிமாவில் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை" எனத் தெரிவித்தார்.
இயக்குநர் பேரரசு, "சாதிக் கலவரம் தூண்டுவது போல் படங்கள் எடுக்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டும் தான் முன்பு எல்லாம் சாதி வைத்து அரசியல் செய்தார்கள். தற்போது சாதியை வைத்து ஒரு சிலர் சினிமாவில் பிழைப்பை நடத்துகின்றனர். சினிமாவில் யாரும் சாதி மதம் பார்த்துப் பழகவில்லை. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் விஜய். விஜய்யைக் கூட இடையில் ஜோசப் விஜய்யாக மாற்றி விட்டார்கள். விஜய்யும் நானும் பல கோயில்களுக்கு சென்று இருக்கிறோம். என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் ஜோசப் விஜய்.
சினிமா அனைவருக்கும் பொதுவானது. தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்ற சாதி படங்களில் அதே சாதியை சேர்ந்தவர்கள் தான் வில்லனாக இருந்தார்கள். சாதி படங்கள் எடுப்பவர்களை சினிமா துறையிலிருந்து ஒழிக்க வேண்டும்" எனப் பேசினார்.
தயாரிப்பாளர் கே.ராஜன், "நயன்தாரா படப்பிடிப்புக்கு வந்தால் 15 உதவியாளர்கள், அவர்களுக்கு 15 ஆயிரம் சம்பளம். நயன்தாராவுக்கு 6 கோடி சம்பளம். இப்படி தயாரிப்பாளர்களுக்குச் சிரமம் கொடுத்தால் எப்படி படம் எடுக்க முடியும். முன்பெல்லாம் ஓரிரு கேரவன் மட்டும் தான் பட ஷுட்டிங்கில் இருக்கும். தற்போது 12 கேரவன்கள் அதிகரித்துவிட்டது.
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பணத்தில் கேரவனுக்குள் சீட்டாடுகிறார்கள். ரஜினிகாந்த் போன்றவர்கள் ஷுட்டிங் நேரத்தில் கேரவனில் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவு கொடுக்கிறார்கள். நடிகை த்ரிஷா தான் நடித்த படத்தின் நிகழ்ச்சிக்கு வருவதற்கு 15 லட்சம் கேட்கிறார். ஆடியோ நிகழ்ச்சிக்கு எந்த நடிகர்கள் வர மறுத்தாலும் அது திமிரின் வெளிப்பாடு" என்றார்.