நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராஜபார்வை'. இப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே.என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார்
இதற்கிடையில் பாபுரெட்டியிடம் இருந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை 20 லட்ச ரூபாய்க்கு விலைபேசி மலேசியா பாண்டியன் என்பவருக்கு விற்றுள்ளார். இதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துள்ளார் பாண்டியன்.
மேலும் கடந்த வருடம் ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் இழுத்தடிக்கவே, ஒருகட்டத்தில் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன்.
ஆனால், பாபுரெட்டி பணத்தை திருப்பி கொடுக்காமல் முரண்டு பிடிக்க, விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அருண்பாண்டியன் கவனத்திற்கு சென்றது. உடனே பணத்தை விரைவில் வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தார் பாபுரெட்டி.
ஆனால் அதற்குள் ஊரடங்கு அமல் படுத்தியதால், அதை பயன்படுத்தி பாபு ரெட்டி தன்னிடமிருந்த 'ராஜபார்வை' படத்தின் மொத்த உரிமையையும் விஜய ராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு 17 லட்ச ரூபாய்க்கு விலைபேசி விற்றுவிட்டார்.
இவ்விவகாரம் பாண்டியனுக்கு தெரியவர உடனே இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மலேசியா பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.