பிரபல டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'Man vs Wild' நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார்.
உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள தனித்துவமான வாழ்க்கை முறையையும், மனிதனுக்கும் வனத்திற்கும் இடையேயான பிணைப்பை இந்த நிகழ்ச்சி எடுத்துக் கூறுகிறது. விலங்கினங்களையும், மனிதனையும் ஒன்றிணைக்கும் வகையில் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டுவருகிறது.

இதன் முந்தைய எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வனப் பயணம் மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு விருந்தளித்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நாட்டின் பிரதமர் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்துமுடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. இதில், மோடியும், பியர் கிரில்ஸும் மேற்கொண்ட சுவாரஸ்யமான பயணத்தின் தொகுப்புகள் இடம்பெற்றிருந்தன. காடுகள், விலங்கினங்கள் பற்றிய தனது அனுபவங்களை மோடி பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'Man vs Wild' நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் இணைந்து அசத்தவுள்ளார். இதற்காக கர்நாடக மாநிலம் பந்திபூர் தேசிய பூங்காவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இதற்காக 'Man vs Wild' தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் பந்திபூர் தேசிய பூங்காவில் முகாமிட்டுள்ளார். டிஸ்கவரி படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்குகிறது.
மேலும், இதற்கான அனுமதியை கர்நாடக வனத் துறை படக்குழுவினருக்கு வழங்கியுள்ளது. அதோடு, வனத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளவும், வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் உள்ளிட்டவற்றிற்கு எவ்வித சேதமும் ஏற்படாதவாறு படப்பிடிப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் வனத் துறை விதித்துள்ளது.
பந்திபூர் தேசிய பூங்காவின் அனுமதி கடிதம் 1

பந்திபூர் தேசிய பூங்காவின் அனுமதி கடிதம் 2

பந்திபூர் தேசிய பூங்காவின் அனுமதி கடிதம் 3
