அஜய் தேவ்கன் நடிப்பில் அமித் சர்மா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மைதான்'. போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் மிகப் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்புக்காகப் போடப்பட்ட செட் சேதமடைந்தது.
தொடர்ந்து மீண்டும் கோடிக்கணக்கில் செலவு செய்து இப்படத்திற்கு முன்னதாக செட் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த செட்டும் சமீபத்தில் அடித்த டவ்-தே புயலால் முழுவதுமாக சேதமடைந்தது.
இந்நிலையில் 'மைதான்' படத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் உருக்கமாகப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "எனது நிர்வாகத் தயாரிப்பாளரும், தயாரிப்புக் குழுவும் செட் போடப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சேதம் குறித்துக் கூறினர்.
நாம் ஒரு படத்தை தயாரிக்கும்போது அதில் நிறையச் சவால்கள் உள்ளன. அதை நாம் எதிர் கொள்ள வேண்டும். எல்லாம் இயல்பு நிலைக்கு வந்தவுடன், படத்தின் எஞ்சிய பகுதிகளை முடிப்போம். எங்களின் உழைப்பு பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.