‘களவானி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார். தற்போது, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’ ஆகிய இரு படங்களில் ஓவியா பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘குளிர் 100°’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஓவியா.
'90ml' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க பப்பு, பார்ட்டி, சரக்கு போன்றவற்றை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த இரட்டை அர்த்தம் அதிகம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும் என குறிப்பிடப்பட்டு இதன் டிரெய்லர் துவங்குகிறது. இதில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கிளாமர் காட்சிகள் அதிகமாய் இடம்பிடித்துள்ளது. இப்படத்தை இயக்கி இருப்பது ஒரு பெண் என்பது பெரும் அதிர்ச்சி.
இந்த டிரெய்லர் வெளியானது முதல் இணையவாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் ஆதாரவு அளித்தும் வருகின்றனர். இந்நிலையில் போஃப்டா நிறுவனர் தனஞ்செயன் இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில், டிரெய்லரை பார்த்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்று டிவிட் செய்துள்ளார்.