விஜய்-அட்லி கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் பிகில் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி உதவி இயக்குநர் செல்வா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்குத் தொடரவும் சென்னை உயர் நீதிமன்றம் இயக்குநர் கே.பி. செல்வாவுக்கு அனுமதி அளித்துள்ளது.
பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி இயக்குநர் கே.பி. செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பின் அந்த வழக்குத் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருப்பதால், பிகில் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனக்கூறி கே.பி. செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணத்திற்காகவும் விளம்பரத்துக்காகவும் அவர் கடைசி நேரத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இயக்குநர் அட்லி தரப்பில், பிகில் கதையை தான் 2018ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகவும் மனுதாரரின் கதை அதன்பிறகே பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகாந்திரம் இல்லாமல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி கே.பி. செல்வா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பிகில் கதைக்கு காப்புரிமை கோருவது தொடர்பாக மீண்டும் வழக்குத் தொடர இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி அளித்துள்ள நீதிமன்றம், மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து சிக்கலில் சிக்கிக்கொள்ளும் நிலையில், கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிகில் திரைப்படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.