தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிவருகிறது. சென்ற முறை நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றிபெற்று தலைவரானார். இதை எதிர்த்து மற்றோரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நடந்துமுடிந்த தேர்தலை ரத்துசெய்த நீதிமன்றம், புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள தனி அலுவலர் ஒருவர் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார். இச்சூழலில், அடுத்த தேர்தலிலாவது ஒருமனதாக முடிவெடுத்து தலைவரைத் தேர்ந்தெடுக்க இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டார். ஆனால், இரு அணிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன் தற்போது தயாரிப்பில் ஈடுபட்டுவரும் தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பாரதிராஜா தலைமையில், 'புதிய தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் சங்கம் உருவாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இதுதொடர்பாக விளக்கமளித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
திரைப்படங்கள் எந்த விதப் பிரச்னையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை. அதற்கு சுயநலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
![பாரதிராஜா அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/bharathiraja-statement-1_0108newsroom_1596302026_1041.jpg)
அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிகள் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இவங்க யாரும் இல்ல...'சந்திரமுகி' அறிவிப்பு விரைவில் வரும் - ராகவா லாரன்ஸ்!