தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இதனையடுத்து இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு பாக்யராஜூம், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளராக பிரசாந்தும், துணைத்தலைவர்களாக குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ் கூறுகையில், நடிகர் சங்க கட்டிடம் இன்னும் முழுவதும் கட்டி முடிக்கவில்லை. எனவே அடுத்து பதவிக்கு வருபவர்களுக்கு பணி அதிகமாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் சவுகிதார் போல் எங்கள் அணி களம் இறங்கி உள்ளது. எங்கள் அணி வெற்றி பெற்றால் பாண்டவர் அணிக்கு மாலைபோட்டு மரியாதை செலுத்துவோம். ஏனென்றால் அவர்கள் தான் கட்டிட பணிகளை தொடங்கியவர்கள்.
நடிகர் ரஜினி கமல், ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எனக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். எங்கள் அணிக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு எதுவும் இல்லை. இதில் அரசியல் இல்லை. கட்டிடம் கட்ட மேலும் 15 கோடி தேவைப்படும் நிலையில் விஷால் அணியினர் எவ்வாறு ஆறு மாதகாலத்தில் கட்டுவேன் என்று கூறுவது எப்படி என்று அப்போது கேள்வி எழுப்பினார்.
பின்னர் பேசிய ஐசரி கணேஷ், "நடிகர் சங்க கட்டிடம் கட்ட தொடக்கத்தில் இருந்து நானும் உழைத்து வருகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கட்டிட பணி சரியாக நடைபெறவில்லை. இந்த கட்டிடத்தை 6 மாத காலத்திற்குள் கட்டி முடிக்க முடிவு செய்துள்ளோம். பொது பணிகளிலும் சமூக சேவைகளிலும் ஈடுபட உள்ளோம். நாடக நடிகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். அவர்களுக்கு அரிசி பருப்பு இலவசமாக மாதம் தோறும் வழங்கப்படும்", என்றார்.