1.மாறா
மலையாளத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த 'சார்லி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'மாறா' திரைப்படம் அமேசான் ப்ரைமில் ஜனவரி 8ஆம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் 'விக்ரம்- வேதா' ஜோடி மாதவன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, தாமரையின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சிறுவயதில் தான் கேட்ட கதைக்கு ஓவியத்தின் மூலம் உயிர் கொடுத்திருக்கும் கலைஞனைத் தேடிச் செல்லும் இளம்பெண்ணின் கதையே 'மாறா'.
மாதவனின் முதிர்ச்சியான நடிப்பு ஓர் நாடோடிக் கதைக்கு பெரும் பின்னடைவாக கூறப்பட்டாலும். பலர் மனதிலும் 'மாறா' மறையா தடமொன்றை பதித்துச் சென்றுள்ளான்.
2.மாநாடு
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், 'மாநாடு'. இதில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டைம் லூப்பை கான்செப்ட்டாக வைத்து உருவான இத்திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு புது ரகம்.
ஒரு கதையில் வரும் முதன்மை கதாபாத்திரமோ, கதாபாத்திரங்களோ, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை, திரும்பத் திரும்ப எதிர்கொள்வதைக் குறிப்பது ‘டைம் லூப்’ (Time loop) எனும் ‘கால வளையம்’. இவ்வாறு நிகழும்போது, கதாபாத்திரம் தன் முயற்சியால் அந்த நாளின் எந்தவொரு செயலையும் மாற்றி, அதில் வெற்றிபெற முடியும்.
அதாவது காலத்துடன் கதாபாத்திரம் ஆடும் ஆட்டமே மாநாடு. இறுதிகட்ட பணிகள் முடிந்தது முதலே வெளியீட்டுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்தது. அசத்தலான திரைக்கதையுடன் சேர்ந்து சிம்புவின் பாடி டிரான்ஸ்பர்மேஷன், நடிப்பு ஆகியவை கூடுதல் வலுசேர்க்க படம் ஏகபோக வெற்றியடைந்தது. புதுமை விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
3. கர்ணன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. கரோனா காரணமாக வசூல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதால் பின்னர் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
90களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு வன்முறை சம்பவத்தினை மையக்கருவாகக்கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. தனுஷின் நடிப்புத் திறமைக்கு மற்றொரு சான்றாக உருவான இத்திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணின் இசை கூடுதல் அப்ளாஷ்களை அள்ளித் தெளித்தது.
4. ராக்கி
'தரமணி' நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்த 'ராக்கி' படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியானது. இதனை 'சாணிக்காயிதம்' படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ராக்கி' திரைப்படத்தை 'ரெளடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ரத்தம் தெறிக்கத் தெறிக்க நகரும் காட்சிகளில் பழிவாங்கலில் தனி ருசி கண்ட மணிமாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. "குழந்தை மூஞ்சிடா இது" என திரைப்படத்தில் அறிமுகமாகும் வசந்த்ரவி ஆக்ரோஷமான நடிப்பில் கால்தடம் பதித்துள்ளார். வழக்கமான ரிவெஞ்ச் ஸ்டோரிடாகவே இருந்தபோதும் பல்வேறு திரைக்கதை உருவாக்கப்பட்ட விதமும், கைதேர்ந்த நடிப்பும் இத்திரைப்படத்தை காணதவர்களை கண்டிப்பாக கவலைக்குள்ளாக்கும்.
5.சார்பட்டா பரம்பரை
இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஜூலை 21ஆம் தேதி வெளியானது. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினார். சந்தோஷ் சிவன் இசையமைத்த இந்தப் படத்தை கே9 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வெற்றிச் சுவையால் தனது நோக்கத்தையே மறந்து தடம் மாறிச்செல்லும் நாயகன், மீண்டும் தனது சபதத்தை நிறைவேற்றப்படும் கஷ்டங்களை விவரிக்கிறது 'சார்பட்ட்டா பரம்பரை’.
இப்படத்தின் வசனங்களும், கதைக்களமும் நெட்டிசன்களால் வெகுவாக கொண்டாடப்பட்டன. ஆர்யா, பா.இரஞ்சித் ஆகியோரின் வாழ்வில் இத்திரைப்படம் ஓர் மைல்கல் எனவே கூறலாம். ஆர்யா ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஓர் ஹோல்சேல் ஸ்பைசி பண்டல்.
6.மண்டேலா
அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் 'மண்டேலா'. இயக்குநர் பாலாஜி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ஓபன் விண்டோ புரொடக்ஷன் தயாரித்துள்ளது. படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
மண்டேலா படத்தில் யோகிபாபுவுடன் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. பின்னர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
வாக்குரிமைக்கு உள்ள அதிகாரத்தை நெற்றிப்பொட்டில் அடித்தால் போன்று அப்பட்டமாக மக்களிடத்தில் தெரிவித்தது 'மண்டேலா'. 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் ரேஸில் கூட இத்திரைப்படம் இடம் பிடித்து தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடிதந்தது.
7.மாஸ்டர்
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது.
இதற்கிடையில், படம் திரையரங்கில் வெளியாகி குறைந்த நாள்களிலேயே ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியானதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
8.பேச்சிலர்
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'பேச்சிலர்' திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் நம்மூர் 'முரட்டு சிங்கிள்' ஆண் எப்படி நடந்துகொள்வான்? இதுவே 'பேச்சிலர்' ஒன்லைன். டாக்ஸிக் ரிலேஷன்ஸிப்பால் நாயகிபடும் அவஸ்தையை கூறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது 'பேச்சிலர்'.
9.ஜகமே தந்திரம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
படம் வெளியான முதல் வாரத்தில், 'ஜகமே தந்திரம்' படத்தினை பார்த்தவர்களின் பிரமாண்ட எண்ணிக்கையில் பாதிப் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்த பார்வையாளர்கள் ஆவார்கள்.
உலகத் தரமான ஒளிப்பதிவை செய்து ஸ்ரேயாஸ் கிருஷ்ணா அசத்த, பின்னணி இசை பின்னியெடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். சுமாரான திரைக்கதை என விமர்சிக்கப்பட்டபோதும் தனஷின் நடிப்புக்கு பாராட்டுகள் நான் ஸ்டாப்தான். தனுஷ் ரசிகர்களின் குட் லிஸ்டில் இடம் பெற்ற மற்றுமொரு திரைப்படம் 'ஜகமே தந்திரம்'.
10.ஜெய் பீம்
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவான 'ஜெய் பீம்' திரைப்படம், நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (amazon prime) ஓடிடி தளத்தில் வெளியானது. 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது. சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் 1993ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வசூல், விமர்சன ரீதியாக மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தது 'ஜெய் பீம்'. அடக்குமுறைக்கு எதிரான மனநிலை கொண்ட ரசிகர்களின் எவர் கிரீன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது 'ஜெய் பீம்'.
11. தேன்
இயற்கையே அரணாகத் திகழும் மலைக் கிராமத்தில் கார்ப்பரேட் நிறுவனம் கால் பதித்தால், கலப்படம் மிகுந்தால் என்ன ஆகும் என்பதே 'தேன்' படத்தின் கதை. கணேஷ் விநாயகன் இயக்கத்தில் மார்ச் 19ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது. நாயகனாக தருண் குமார், நாயகியாக அபர்ணதி, குணச்சித்திர வேடத்தில் தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனைவரையும் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்கின்றனர் நாயகனும், நாயகியும். சில வருடங்கள் கழித்து நோய்வாய்படும் நாயகி அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும், எங்கும் நிறைந்த லஞ்சத்தாலும் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகிறார். நாயகன் விழித்துக்கொண்டாரா? மனைவியைக் காப்பாற்றினாரா? என்பதற்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
கார்ப்பரேட் அரசியல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, நான்கு பேரின் சுயநலப் பசிக்கு மலைக்கிராமங்கள் வேட்டையாடப்படுவது, லஞ்சத்தால் பாழ்படும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பேசத்தவறியதாகவும் விமர்சிக்கப்பட்டபோதும் சினிமா ரசிகர்களிடையே நல்ல ஆதரவினைப் பெற்றுள்ளது. இயற்கை நலம் விரும்பிகளின் இன்பாக்ஸ் லிஸ்டில் இருக்க வேண்டிய படம் 'தேன்'.
12. டெடி
'மிருதன்', ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான படம் ‘டெடி’. ஆர்யா, சாயிஷா நடித்துள்ள இத்திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி வெளியானது. இவர்களுடன் இணைந்து கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். ஓசிடி எனப்படும் ஒரு குறைபாட்டுடன் அவதிப்படுகிறார் நாயகன். உடலுறுப்புகளை திருடும் கும்பலிடம் அகப்பட்டுக்கொண்ட நாயகியின் ஆன்மா ஒரு டெடி பியர் பொம்மைக்குள் செல்கிறது.
ஆர்யாவால் டெடிக்கு உதவ முடிந்ததா? நாயகியின் ஆன்மாவால் மீண்டும் தன் உடலுடன் சேர முடிந்ததா என்பதே ‘டெடி’ படத்தின் கதை. தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவான இத்திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. புதுமை விரும்பிகளின் புக்கிங் லிஸ்டில் 'டெடி'க்கு முதலிடம்.
13.டிக்கிலோனா
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. கார்த்திக் யோகி இயக்கிய இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதில் அகனா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹாக்கி வீரராக விரும்பும் மணி (சந்தானம்), தான் விரும்பிய ப்ரியாவை (அனகா) திருமணம் செய்துகொள்கிறான். இருப்பினும் நினைத்தபடி ஹாக்கி வீரராக முடியாமல் மின்வாரியத்தில்தான் வேலை கிடைக்கிறது. இதனால் மனைவியுடன் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்படியாக வாழ்வில் நிம்மதி இழந்து தவிக்கும் மணிக்கு, கால இயந்திரத்தில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
இதனால் தன் திருமணம் நடக்கும் தினத்திற்குச் சென்று, அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு, தன்னை விரும்பும் மற்றொரு பெண்ணை (ஷரின்)கல்யாணம் செய்கிறான். இறுதியில் சந்தானம் யாருடன் வாழத் தொடங்கினார் என்பதே படக்கதை. காமெடி கலாட்டாவில் பட்டையை கிளப்பியிருக்கும் சந்தானத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஹார்ட்டின்கள் வந்து குவியத் தொடங்கின.
ஹைலைட்டாக படத்தில் இடம்பெற்ற, "கை வச்சாலும், வைக்காம போனாலும் மல்லி வாசம்..." ரீமேக் பாடலானது இளசுகளிடம் ஏகபோக வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'டிக்கிலோனா', டைம் டிராவல் காமெடி கதையில் தனி முத்திரை பதித்ததில் கண்டிப்பாக காண வேண்டிய படம்.
14. டாக்டர்
சிவகார்த்திகேயன் - நெல்சன் கூட்டணியில் 0உருவான 'டாக்டர்' திரைப்படமானது அக்டோபர் 9ஆம் தேதி வெளியானது. பிரியங்கா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எஸ்.கே. புரொடக்ஷனுடன், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கும், பிரியங்காவிற்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தபோது, அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறி நாயகி திருமணத்தை நிறுத்துகிறார்.
இந்தச் சூழ்நிலையில் பிரியங்காவின் அண்ணன் மகள் காணாமல் போக, சிவகார்த்திகேயன் அவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அரைத்த மாவையே அரைத்த திரைப்படம் என விமர்சிக்கப்பட்டபோதும், உலகளவில் 100 கோடியைத் தாண்டி வசூலித்த முதல் சிவகார்த்திகேயன் எனும் பெருமையைத் தட்டிச் சென்றது 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கண்டிப்பாக காண வேண்டிய திரைப்படங்களின் பட்டியலில் 'டாக்டர்' நீங்கா இடம் பெற்றுள்ளது.
15. சுல்தான்
நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு, கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ளனர்.
இத்திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. 'சுல்தான்' கதை தந்தைக்காக மகன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். மகனுக்கு வாழ்க்கை லட்சியம் வேறு. தந்தையின் சொல்லிற்காக அதைச் செய்ய முடிவெடுக்கிறான். அதன் பிறகுதான் அவனுக்கு நூறு பேரை சமாளிக்க வேண்டும் என தெரிகிறது. அவர்கள் அனைவரும் ரௌடிகள். அவர்களை எப்படி கட்டி மேய்க்கிறான் என்கிற சவால்தான் சுல்தான் திரைப்படம்.
ஆக்ஷன் பாணியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன, விவசாயத்தை மேன்மைப்படுத்தி கூறும் திரைக்கதை என்பதால் அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்பட வரிசையில் இடம் பெற்றிருக்கிறான் 'சுல்தான்'.
16. பூமிகா
தமிழ் சினிமாவில் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகமாக வெளியாகின்றன. அந்த வரிசையில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் 'பூமிகா'. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படத்தை இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இயக்கினார்.
ஒரு புதிய பில்டிங் புராஜெக்ட்டுக்காக ஆள் அரவமில்லாத ஒரு ஸ்கூல் கேம்பஸுக்குள் செல்கிறது ஒரு குழு. அங்கு அடுத்தடுத்து நிகழும் அமானுஷ்யங்களும், பிரச்சினைகளும், அதற்கான காரணங்களும்தான் 'பூமிகா' திரைப்படத்தின் கதை. ஒரு த்ரில்லர் கதை, அதில் ஒரு உலகளாவிய கருத்து என முன்வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் இருள் சூழ்ந்த இரவுகளையும் சிரத்தையுடன் படமாக்கியிருப்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன. படத்தில் வருகின்ற ஓவியங்களும், அனிமேஷன்களும் கண்களை கவர்ந்திழுத்துள்ளன. ஐஸ்வர்யாவின் அடுத்த லெவல் நடிப்பை மிஸ் செய்யக்கூடாதென நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் 'பூமிகா'.
17. லிப்ட்
அறிமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் கவின், அமிர்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘லிப்ட்’. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளிலேயே வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. பின்னர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. மென்பொருள் பொறியாளரான குருபிரசாத் (கவின்), சென்னைக்கு பணி மாற்றலில் வருகிறார்.
அங்கு மனிதவள அலுவலராக இருக்கும் ஹரிணியுடன் (அம்ரிதா) அவருக்கு முட்டல், மோதல் என நகர்கிறது. ‘ஓவர் டைம்’ முடித்துவீடு திரும்புவதற்காக அலுவலகத்தின் லிப்டில் ஏறுகிறார். ஆனால், லிப்ட் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து பதற்றமாகிறார்.
அந்நேரம், ஹரிணியும் அதே லிப்ட்டில் வந்து ஏறிக்கொள்ள, எலியும் பூனையுமாக இருக்கும் இருவரும், அந்த அலுவலகமும் லிப்டும் தங்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதையும், அவர்கள் தனிமையில் இல்லை என்பதையும் உணர்கின்றனர். அடுத்து வரும் 3 மணி நேரத்துக்குள் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதற்காக என்னவெல்லாம் செய்தனர், அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பது கதை.
அமானுஷ்யம், பேய் என தமிழ்சினிமா கைவிட மறுக்கும் களத்துக்குள் ஐ.டி. துறையை கொண்டுவந்து, அதற்குள் தொழில்நுட்ப அணியை சிறப்பாக பயன்படுத்தி களமாடியிருக்கிறது ‘லிப்ட்’. ஹாரர் த்ரில்லர் ரசிகர்களின் போர்ட்போலியோவில் மிஸ் செய்யக்கூடாத படம் 'லிப்ட்'.
18. ரைட்டர்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ரைட்டர். காவல்துறையில் மண்டிக்கிடக்கும் அதிகாரப் போக்கு, சாதிய பாகுபாடுகள் குறித்த விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது இத்திரைப்படம். பிராங்க்லின் ஜேக்கப் இயக்கத்தில் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சமுத்திரக்கனி, ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிடோர் நடித்துள்ளனர். திருச்சி காவல்நிலையமொன்றில் ரைட்டராக பணி செய்யும் சமுத்திரக்கனி காவலர்களுக்கு சங்கம் அமைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அதனாலேயே அவர் மேலலுவலர்களின் தாக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார்.
காவலர்களுக்கான சங்கம் அமைக்க தீவிரமாக செயல்படும் சமுத்திரக்கனி சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அங்கு போலி வழக்கில் கைது செய்யப்படும் ஹரியும், சமுத்திரக்கனியும் ஒருபுள்ளியில் சந்திக்க வேக மெடுக்கும் திரைக்கதையே ரைட்டர்.
கடைநிலை காவலர்கள் தனது மேலலுவலர்களின் அதிகார தடித்தனத்தால் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் இந்த சினிமா வேறொரு கிளையில் நின்று பேசுகிறது. அதிகாரத்துக்கு எதிரான வன்முறையை விரும்பாதவர்கள் காண வேண்டிய முக்கியத் திரைப்படம் 'ரைட்டர்'.
19. காடன்
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகிய 'காடன்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியானது. நடிகர்கள் விஷ்ணு விஷால், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது 'காடன்'தான்.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படமானது வெளியானது. காட்டையும் அதில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கான யானைகளையும் மனிதர்களின் லாப வேட்டையிலிருந்து காப்பாற்றப் போராடும் படித்த பழங்குடி மனிதனின் கமர்ஷியல் யுத்தம்தான் ‘காடன்’. ‘காடன்’ ஆக நடித்திருக்கும் ராணாவின் நடிப்பை ரசிக்க முடிகிறது.
விஷ்ணு விஷால் தனக்குக் கொடுக்கப்பட்டதைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். படத்தின் பெரும்பகுதி வனம் சார்ந்தே நகர்வதால் ஏ.ஆர்.அசோக்குமார் வனக் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ராணா டகுபதி ரசிகர்கள் தவறவிடக் கூடாத ஒரு திரைப்படம் 'காடன்'.
20. வாழ்
அருவி என்ற முதல் படத்திலேயே யார் இந்தப் படத்தின் இயக்குனர் என ஆச்சரியப்பட வைத்தவர் அருண் பிரபு புருஷோத்தமன். இவர் இயக்கத்தில் ஜூலை 16ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வாழ்'. பிரதீப், பானு பார்வதி சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மென்பொருள் துறையில், அன்றாட பணி அழுத்தங்களுக்கு நடுவே அல்லாடும் சராசரி இளைஞன் பிரகாஷ் (பிரதீப் அந்தோணி). அவனது வாழ்வில் எதிர்பாராமல் நுழையும் ஒரு பெண்ணுடனும் (பானு டி.ஜே) அவளது 6 வயது மகனுடனும் (அகரவ்) மேற்கொள்ளும் திடீர் பயணம், வாழ்வின் எதிர்பாராத தருணங்களை அவனுக்குப் பரிசளிக்கிறது.
அதன் வழியாக, மனிதர்களிடமும் இயற்கையிடமும் பிரகாஷ் பெற்றுக்கொண்டதும், கற்றுக்கொண்டதும் என்ன என்பதுதான் கதை. சக மனிதர்களிடமும், இயற்கையிடமும் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், கதாநாயகனின் வாழ்க்கையை ஒரு சுய பரிசோதனைக் களமாக மாற்றிவிடுவது திரைமொழியின் முத்தாய்ப்பு. இனம், மொழி, நிலம் ஆகிய எல்லைகளைக் கடந்து பயணிக்க விரும்பும் ஒருவர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
21. தலைவி
ஏ.எல் விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ செப்டம்பர் 10ஆம் தேதி வெளியானது. நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்.
‘தலைவி’ என்ற தலைப்புக்கு ஏற்ப, ஒரு வெற்றிகரமான திரைத் தாரகையின் தனிப்பட்ட வாழ்வும், அரசியல்வெற்றியும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான காட்சியமைப்புகள், ஒளிப்பதிவு, கலை இயக்குநரின் பணி,பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கச்சிதமாகப் பொருந்திப்போய், மேக்கிங், நட்சத்திரத் தேர்வு, கார்க்கியின் வசனம் ஆகிய அம்சங்கள் சிறந்த பொழுதுபோக்கு படமாக ஆக்கிவிடுகின்றன. ஜெயலலிதாவின் ‘பயோபிக்’காக அல்லாமல் சுவாரஸ்யமான காதல் கதை ரசிகர்களுக்கு ‘தலைவி’ திரைப்படம் தவறவிடக்கூடாத ஒன்று.
இதையும் படிங்க: 2021 Recap - நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்