நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்து உருவாகியிருக்கும் படம் வெள்ளைப்பூக்கள். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விவேக் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், "நாற்பது வருடங்களுக்கு முன்பு வெளிவந்த உதிரிப்பூக்கள் படம் தமிழ் திரையுலகில் எப்படி ஒரு புதிய ட்ரெண்ட் செட்டராக - இப்படியும் படம் எடுக்கலாம் என்று காட்டியதோ அதே போன்று வெள்ளைப்பூக்கள் படம் ஒரு டிரென்ட் செட்டராக அமையும். காரணம் எந்தக் கதையை வேண்டுமானாலும் நாம் படம் எடுக்கலாம். ஆனால் ஜெயிப்பது எப்படி என்றால் கதை சொல்லும் விதம்தான். அப்படி புதுமையான விதத்தில் படமாக்கப்பட்டதுதான் வெள்ளைப் பூக்கள். இந்தப் படம் வெளி நாட்டில் படமாக்கப்பட்டது முதல் முறையாக செல்முருகன் இல்லாமல் நான் மட்டும் தனித்துச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஷூட்டிங் அற்புதமாக நடந்தது. இங்கு இருப்பது போன்று தனித்தனி டிபார்ட்மென்ட் அங்கு இல்லை. மேலும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை யாருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்" என்ற வேண்டுகோளையும் வைத்தார்.
"முதலில் இந்த படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இதுவொரு கம்பீரமான அதிகம் பேசாமல் ஆக்ஷனில் இறங்கும் கேரக்டர் அதனால் சத்தியராஜ் போன்ற ஆஜானுபாகுவான ஒருத்தர் போலீஸ் ஆபீசராக நடித்தால் நன்றாக இருக்குமே என்று தயாரிப்பாளரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒரு காமெடியன் இது போன்ற ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். மேலும் கதையை நம்பிதான் இப்போது ஆடியன்ஸ் வருகிறார்கள். அதனால் நடிகர்கள் பற்றி ரசிகர்கள் கவலைப்படுவதில்லை. அதனால் நீங்கள் நடியுங்கள் என்று இயக்குனர் விவேக் கூறினார். அதன் பிறகுதான் இந்தப் படத்தில் நடித்தேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் காமெடி பண்ணினால் படம் நன்றாக ஓடுகிறது. ஆனால் கதாநாயகனாக நடித்தால் ஓடவில்லை "நான்தான் பாலா" என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம். அந்தப் படம் ரிலீசாகும்போது கமல்ஹாசனின் பாபநாசம் ரிலீஸ் ஆனது. அதனால் என் படம் நாசமானது" என தெரிவித்தார்.