பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘இரு கோடுகள்’. இரண்டு பெண்களை மணந்த ஒருவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகரும் இத்திரைப்படம் தேசிய விருது பெற்றது. வணிக ரீதியாக வெற்றிபெற்ற இத்திரைப்படம் மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் ‘எரெடு ரேகேகளு’, தெலுங்கில் ‘கலெக்டர் ஜானகி’, ஹிந்தியில் ‘சஞ்ஜோக்’ என்ற பெயரில் ரீமேக்கானது.
சர்வதேச இந்திய திரைப்பட பொன்விழாவில் இந்தப் படத்தை திரையிட விழாக் குழு முடிவு செய்துள்ளது. இது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50ஆவது ஆண்டு என்பதால், 50 ஆண்டுகளுக்கு முன்பு (1969ஆம் ஆண்டு) தேசிய விருதுபெற்ற அத்தனை இந்திய மொழி திரைப்படங்களையும் இதில் திரையிடவுள்ளனர். நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் இந்த விழா நடைபெறவுள்ளது.