சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நாயகன் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘மெய்’. அறிமுக இயக்குநர் பாஸ்கரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் சார்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மருத்துவத் துறையில் நிகழும் ஊழல் குறித்த கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சார்லி உள்ளிட்ட ஏராளமான படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், "இந்தக் கதையில் வருவது போன்று மருத்துவமனைகளால் நானும் பாதிக்கப்பட்டேன். சாதாரணமான ஒரு காய்ச்சலுக்கு ஏராளமான சோதனைகள், ஸ்கேன்கள் எடுத்து ஒரு லட்ச ரூபாய் பில் கொடுத்தார்கள்.
இறுதியில் அவர்கள் எனக்குக் கொடுத்தது ஒரு டோலாபர் மாத்திரை மட்டுமே. என்னால் இந்த ஒரு லட்ச ரூபாய் கொடுக்க முடியாது என்ற நிலை இல்லை, இருந்தாலும் எதற்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்போதுதான் இந்தக் கதையை என்னிடம் கூறினார்கள். ஒரு நல்ல சோசியல் மெசேஜ் உள்ள இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" எனப் பேசினார்.
அதன்பிறகு கதாநாயகன் நிக்கி சுந்தரம் பேசுகையில், "திரைத் துறையில் வர வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் நல்ல அனுபவம், இதற்காக படக்குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை ஐஸ்வர்யா திறமையானவர், எனக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்தார். எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்த எனது பெற்றோருக்கு நன்றி" என்றார்.