வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தின், நூறாவது நாள் விழா சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடைப்பெற்றது.
இதில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நூறாவது நாள் நினைவு ஷீல்டு வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றிமாறன் பேசுகையில், ’படம் முடிந்த பிறகு நாம் சந்திக்கும் மேடை எப்போதுமே உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். 100 நாட்கள் ஓடிய படத்தில் நாங்கள் இடம்பெற்றதை மகிழ்ச்சியான ஒன்றாக நினைக்கிறேன். நான் எப்போதும் கூறும் ஒரு விஷயம், ஒரு படம் தன்னை உருவாக்கிக் கொள்ள நாம் ஒரு பாத்திரமாகவே இருக்கிறோம். அதில் இயக்குநர் என்பவர் முதன்மையான பாத்திரம்.
தமிழ் மக்களின் நிலம், வாழ்வியல் குறித்த இன்றைய வெளிப்பாடுதான் 'அசுரன்' படம். இவை இரண்டின் ஒற்றுமைக்கான தேவையே அசுரனின் வணிக வெற்றிக்கான காரணமாக நான் நினைக்கிறேன். வணிக வெற்றி என்பது விபத்து என்று பாலுமகேந்திரா எப்போதும் கூறுவார். ஏனெனில் அதை நாம் தீர்மானிக்க முடியாது. எப்பொழுதும் எனக்கு உடன்பாடான விஷயங்களை மட்டுமே நான் செய்வேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி ஒரு செயலையும் செய்ய வைக்க முடியாது. அதற்கு நான் உடன்பட மாட்டேன்.
2003ஆம் ஆண்டு முதல் தனுஷுடன் பணி செய்கிறேன். தனுஷ் எப்போதுமே இயக்குநர்களின் நடிகர். அசுரனின் கதாபாத்திரம் மீது அவருக்கு அதிகமான நம்பிக்கை இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் மற்றவர்கள் நடித்திருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும். ஒரு படத்தை இயக்கத் தொடங்கியவுடன் நான் என் சொந்த வாழ்விலிருந்து விடுப்பு எடுத்துவிடுவேன்.
'அசுரன்' படத்தின் வணிக ரீதியிலான வெற்றிக்கு ஊடகங்கள் முக்கியமான காரணம். எங்கள் உழைப்பை மதித்து படத்தின் குறைகளை விட்டு நிறைகளை மட்டுமே ஊடகங்கள் பேசியது’ என்றார்.