ட்ராமெடி (Dramedy) எனும் பதம் வெளிநாட்டு திரைப்படங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஜானராக இருக்கிறது. நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஏற்கனவே ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. அதுவும் தமிழில் இந்த சொல் புழக்கத்திற்கு வரும் முன்பாகவே அவ்வகைப் படங்கள் வெளிவந்துள்ளன. நாம் அற்புதமான குடும்ப படங்கள் பலவற்றைத் தந்திருக்கிறோம்.
உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில் நகைச்சுவை பொங்கும் உணர்வுப்பூர்வமான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த படமாக தயாரிக்கவுள்ளார் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஜே. செல்வகுமார்
இன்னும் தலைப்பிடப்படாத 'புரோடக்சன் நம்பர் 7' எனும் இந்த படத்தில் அசோக் செல்வன், நிஹாரிகா நடிக்கிறார்கள். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி இப்படத்தில் அறிமுக இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். இப்படத்தின் இசையமைப்புப் பணிகளை லியான் ஜேம்ஸ் தற்போது தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து கெனன்யா ஜே. செல்வகுமார் கூறுகையில், ”எங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளைத் தயாரிப்பதையும் முக்கியக் குறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.
நான் எப்போதும் பாலிவுட்டில் Rajshri நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் பெரும் வெற்றி பெற்ற குடும்ப டிராமாக்களை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் தயாரித்த ’ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்’, ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ போன்ற படங்கள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.
அதே போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையை தேடியபோது இயக்குநர் ஸ்வாதினி அப்படியான ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் என்னை அணுகினார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு வருட காலம் தனது திரைக்கதையில் வேலை செய்து, குடும்ப உணர்வுகள் பொங்க, காதல், காமெடி சரிவிகிதத்தில் கலந்திருக்கும் விதத்தில் திரைக்கதையை மெருகேற்றினார்.
'ஓ மை கடவுளே' மூலம் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கும் அசோக் செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமைகளைக் கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி.
இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளைத் தொடக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய ஊரடங்கு சூழல் முழுவதுமாக மீண்டதும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம்' எனத் தெரிவித்தார்.