கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றின் அருகே டாக்டர் அம்பேத்கர் நகர் மற்றும் ஈபிஎஸ் நகர் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் ஆற்றங்கரைக்கு சாக்கடை கால்வாய் வழியாகவே சென்று வருகின்றனர்.
இதனால் இப்பகுதி மக்கள் பலர் பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தென்பெண்ணை ஆற்றின் சாக்கடை கால்வாயைப் பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் மூன்று இடங்களில் ரூபாய் 3 லட்சம் மதிப்பில் சிறு பாலங்கள் கட்டப்பட்டன.
இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி பாலங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் பங்கேற்று பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யநாராயண ராவ், 'தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர். காவேரிப்பட்டணமான இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி சாக்கடை கால்வாய் வழியாகச் சென்று கொண்டிருந்த மக்களுக்குப் பாலம் அமைத்துக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்கள் மன்றத்தினர் செய்வார்கள்.
2020-ல் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். 2021-ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும். 2021 தேர்தலில் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பார்' என தெரிவித்தார்.