திருச்சி: முதல் முறையாக திருச்சி நகரில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.
திருச்சியில் வரும் 15ஆம் தேதி 'தாய் மண்ணே வணக்கம்' என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள மொராய்ஸ் சிட்டியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”இந்த நிகழ்ச்சிக்காக கடந்த நான்கு மாதங்களாக ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. தமிழ் மற்றும் இந்திப் பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்படும். நான் இசையமைத்தது மற்றும் பாடியது என 600 பாடல்கள் உள்ளன. அதனால் திருச்சி நிகழ்ச்சிக்கு என்று பிரத்யேகமாக எவ்வித பாடலும் தயாரிக்கவில்லை.
சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலை நகரத்தில் தற்போதுதான் இதுபோன்றதொரு இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து அடுத்தடுத்த நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது. அங்கு அதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகள் அதிகம் உள்ளன. வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்க்கின்றன
உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஆல்பம் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஹாலிவுட்டில் முதல்கட்ட பணி முடிந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்” என்றார்.