தென்னிந்திய இசை உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவருமான ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (டிச.28) காலை உயிரிழந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் என்றால் இசையைக் கடந்து பலருக்கும் நினைவுக்கு வருபவர் அவரது தாய் கரீமா பேகம். தந்தை மறைவால் உருக்குலைந்து போயிருந்த ரகுமானின் கையில் கீபோர்ட்டை கொடுத்து இசையமைப்பாளராக்கியவர் அவரது தாய் கரீமா.
தன் பேட்டிகளிலும், மேடைப் பேச்சுகளிலும் தன் தாய் குறித்து ஏதேனும் ஒரு இடத்திலாவது ரஹ்மான் பேசி விடுவார். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், அவர் ஆஸ்கர் பெறுவதற்கு முன்னதாக 'விருது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ”எனக்கொரு அன்னை இருக்கிறார். நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய்விட்டாலும் என் அன்னையின் அன்பு எப்போதும் மாறப்போவது இல்லை. அது போதும் எனக்கு” எனத் தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன்மூலம் ரஹ்மான் தன் தாய் கரீமா பேகத்திடம் கொண்டிருந்த பற்று குறித்து தெரிந்துகொள்ளலாம்.
அண்மையில் ரகுமானின் 53ஆவது பிறந்த தினத்தில் இந்த நாளில் நீங்கள் யாரை நினைவுகூர விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, “நிச்சயமாக. என் அம்மாவைத்தான். தற்போது உடல்நிலை சரியில்லாமல் அவர் இருக்கிறார்” என கண்கள் கலங்கியபடி தெரிவித்திருந்தார்.
ஓராண்டுக்கும் மேலாக கரீமா பேகம் உடல்நலம் குன்றியிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினரும், ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.