சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து முதல்முறையாக தயாரிக்கும் '99 சாங்ஸ்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது.
ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து தயாரித்துள்ள படம் '99 சாங்ஸ்'. இசையை மையமாகக் கொண்டு உணர்ச்சிகரமான காதல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதையை ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியுள்ளார்.
படத்தில் புதுமுக நடிகர்கள் இஹான், எடில்ஸி இருவரும் பிரதானக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச்.25) நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படத்தின் ஹீரோ இஹான் உள்பட தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், எஸ்ஜே சூர்யா, கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர்கள் யுவன் ஷங்கர்ராஜா, அனிருத், ஜி.வி. பிரகாஷ் குமார், முன்னணி பாடகர்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:
”என் மீது அன்பு வைத்து எனக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இங்கு வருகை தந்துள்ள நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள். இந்தப் படத்தின் கதை வாழ்க்கைதான். ஒவ்வொருவரின் வீட்டிலும் நடப்பதுதான்.
இசையில் சாதிக்க வேண்டும் என்று யார் சொன்னாலும், சந்தேகமாக பார்ப்பார்கள். ஒரு இசைக்கலைஞரின் மனதில் இருக்கும் போராட்டம் அதை அவர் எதிர்கொள்ளும் விதமாக படத்தின் கதை உள்ளது.
இந்தப் படத்தை சென்னையிலிருந்து ஒருவர் இந்த உலக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து, படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஏனென்றால் இங்கு வியக்கத்தக்க கதைகள் நிறைய இருக்கின்றன. சுமார் 750 பேர் வரை ஆடிஷன் செய்து இஹானை தேர்வு செய்தோம். இந்தப் படத்துக்காக அவர் ஒரு வருடம் வரை இசை முறையாகப் பயின்றார்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய படத்தின் கதாநாயகன் இஹான், ”ஏ.ஆர். ரஹ்மானிடம் படம் என்பதால் மிகவும் அர்பணிப்புடன் இருந்தேன். சென்னையில் ஒரு வருடம் தங்கி பியானோ கற்றுக்கொண்டேன். பின்னர் முறையாக நடிப்புப் பயிற்சியும் பெற்றேன்.
ஏ.ஆர். ரஹ்மான் எழுதி, இசையமைத்து, தயாரிக்கும் படத்தில் அறிமுகமாவதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.
'99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகிறது. இவ்விழாவுக்கு வந்திருந்த திரைப்பிரபலங்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பேசியதுடன், அவரது படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெயர் மாற்றத்தால் தேவதைகளின் மாட வெளிச்சம் குறையாது - மாரி செல்வராஜ்