இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து 'ஆல்பம்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். தொடர்ந்து 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வசந்தபாலன், தேசிய விருதையும் வென்றுள்ளார்.
தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய வசந்தபாலன்
தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் 'ஜெயில்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இவற்றில் நடிகர் தனுஷ், நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்...’ பாடல் 14 லட்சம் (1.4 மில்லியன்) பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
தற்போது, வசந்தபாலன் தனது பள்ளித் தோழர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதில் ஒருவரான வரதராஜன், வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் தொடங்கி, அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், காஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர்.
பிக்பாஸ் பிரபலங்கள்
இவர்கள் இணைந்து தயாரிக்கவுள்ள முதல் படத்தை வசந்தபாலனே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும், துஷாரா விஜயன் நாயகியாகவும், சிங்கம்புலி, பரணி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
'வெயில்', 'ஜெயில்' ஆகிய படங்களுக்கு பிறகு ஜி.வி பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக வசந்தபாலனுடன் இணைகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து படக்குழு செய்தி வெளியிட்டு வருகிறது.
ஏற்கெனவே பிக்பாஸ் பிரபலங்களான நடிகை வனிதா விஜயகுமார், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம், ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி, தயாரிப்பாளர் J.S.K சதிஷ், யூ-ட்யூப் புகழ் ஷாரா ஆகியோர் தற்போது இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வசந்தபாலன் படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலம்!