நடிகர் விஜய் தனது சிறுவயதில் தந்தையின் இயக்கத்தில் வெளியான சில படங்களில் நடித்திருந்தாலும் 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார்.
அதன் பிறகு ரசிகன், தேவா, செந்தூரபாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் விக்ரமன் இயக்கத்தில் வந்த பூவே உனக்காக படம்தான் அவருக்கு முதல் வெற்றியையும் ரசிகர்கள் மத்தியில் அறிமுகத்தையும் பெற்றுத்தந்தது.
அதிரடி கலந்த கமர்ஷியல் படங்களின் பக்கம் கவனத்தை திருப்பிய விஜய் பண்டிகை நாட்களன்று தனது படத்தின் வெளியீட்டை வைத்து தனது கிராப்பை ஏற்றிக்கொண்டார். அதுவும் பொங்கல் பண்டிகை அன்று தனது படங்கள் வெளியிடுவதை உறுதிசெய்துகொண்டார்.
பொங்கல் பண்டிகையை குறிவைத்து வந்த அவரது படங்கள் வசூலில் சக்கைபோடு போட்டன. அதற்கு முதலில் பாதை அமைத்தது சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வந்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம். விஜய், சூர்யா இணைந்து நடித்து வெளியான அத்திரைப்படம் பெரும் வெற்றியை பதிவு செய்தது. இப்படத்துடன் அஜீத்தின் தீனா, விஜயகாந்தின் வாஞ்சிநாதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இருப்பினும் பிரண்ட்ஸ் திரைப்படம் அனைத்து குடும்பங்களும் கொண்டாடும்விதமாக இருந்தது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
அடுத்து 2003ஆம் ஆண்டில் செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், சினேகா நடிப்பில் வெளியான படம் வசீகரா. இந்த படம் வெளியான நேரத்தில் சில தரப்பினருக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால் இதுவும் விஜய்க்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதேநாளில், தூள், சொக்கத்தங்கம், அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
அடுத்ததாக 2005அம் ஆண்டு விஜய்க்கு முக்கியமான ஆண்டு. முழுநேர மாஸ் ஆக் ஷன் ஹீரோவாக மாறிய விஜய்யின் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற திருப்பாச்சி படம் வெளியானது. பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் தங்கச்சி பாசத்தில் தாய்மார்களின் கண்களை குளமாக்கியது.
கடந்த 2006ஆம் அண்டில் ஆதி. திருமலை கொடுத்த வெற்றியால் மீண்டும் இணைந்த விஜய் - ரமணா கூட்டணி. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை. தெலுங்கு படங்களை போன்ற வலுவில்லாத கதையால் தோல்வியடைந்தது.
விஜய் என்னதான் தோல்வி அடைந்தாலும் அதை எல்லாம் மீறும் வகையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிடுவார். அப்படி அவர் கொடுத்த ஒரு பிளாக்பஸ்டர் தான் 2007ஆம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன போக்கிரி. பிரபு தேவா - விஜய் கூட்டணியில் உருவாகிய படம், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து ஹிட்டடித்த படத்தின் ரீமேக்காகும்.
விஜய்க்கே உரிய ஸ்டைலில் படத்தை இயக்கியிருந்தார் பிரபுதேவா. படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றிபெற்றன. அதுவும் போக்கிரி பொங்கல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
அடுத்ததாக அதே விஜய் - பிரபுதேவா இணைந்து 2009 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் வில்லு. போக்கிரி வெற்றியை மனதில் வைத்து படமெடுத்த இருவருக்கும் போக்கிரி போல் மாஸாக இருக்கும் என்று நம்பிவந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது வில்லு திரைப்படம். விழுந்தால் உடனே இமயமாய் எழுவதுதானே விஜய்யின் பழக்கம்.
தன்னை வைத்து ஃப்ரண்ட்ஸ் படமெடுத்த இயக்குநர் சித்திக்குடன் மீண்டும் இணைந்த விஜய் 2011ஆம் ஆண்டில் காவலனாக வந்தார். வழக்கமான ஆக் ஷன் கதையை விட்டுவிட்டு நீண்ட இடைவெளிக்குபிறகு காதல் கதையில் விஜய் நடித்திருந்தார். அசினுடன் இவர் செய்யும் காதல் சேட்டைகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. ரிலீசின் போது சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தியது.
கடந்த 2012ஆம் ஆண்டில் இயக்குநர் ஷங்கர் – விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா கூட்டணியில் உருவாகி வெளியான படம் நண்பன். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். இதில் விஜய் தனது ஹீரோ இமேஜை தவிர்த்து ஜீவா, ஶ்ரீகாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். வழக்கமான விஜய்யாக இல்லாமல் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இப்படமும் வெற்றிபெற்றது.
விஜய் – மோகன் லால் காம்பினேஷனில் 2014ஆம் ஆண்டில் வந்த படம் ஜில்லா. பக்கா கமர்சியல் படம். இதில் விஜய் காவல்துறை அலுவலராக நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்துடன் இணைந்து அஜீத்தின் வீரம் படமும் வெளியானது. ஆனால் இரண்டு படங்களும் வெற்றிபெற்றது. தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் பைரவா பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவான படம் பைரவா. ஆக்ஷன் படம்தான் என்றாலும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் பழைய மாவையே அரைத்தது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. முதலுக்கு மோசமில்லை என்ற ரகம் பைரவா.
இதோ இன்று மாஸ்டர் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ் ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீது அனைத்து தரப்பின் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவும் விஜய்யின் பொங்கல் ரிலீஸ் வெற்றி பட்டியலில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க : 100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து அசத்திய சோனு சூட்