நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான 'ஆடை' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமலா பால் பேசுகையில், 'ஆடை' ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த 'ஆடை' பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம்.
இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த விஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றி கூறியிருந்த கருத்தைத்தான். அதுகுறித்த வசனமும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வதுதான்ன் ‘பிராங்க்’. தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைதான் படத்தில் காண்பித்திருக்கிறோம்.
சுதந்திரம் என்றால் என்னவென்று அவரவர்க்கு ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்ன என்பதை படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தைப் பற்றிய செய்திகளில் தவறான தலைப்புகளைப் பதிவிட்டு வரும் தந்திரம் நடந்துக் கொண்டிருக்கிறது. இது நெறிமுறையற்ற விஷயம்.
நாங்கள் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை. இப்படத்திற்கான முதல் பார்வை மற்றும் டீஸர் பார்க்கும்போதே அனைவருக்கும் தெரிந்திருக்கும் இதைவிட சிறந்ததைக் கொடுக்க முடியாது. படத்தை இப்படித்தான் எடுத்திருக்கிறோம் என்று நாங்கள் முன்பே நேர்மையாகக் கூறிவிட்டோம். நாங்கள் யாரையும் ஏமாற்றியோ, தவறாக வழிகாட்டியோ இப்படத்தைப் பாருங்கள் என்று கூறவில்லை.
இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. ’காமினி’ என்ற பெண் சுதந்திரமான, தைரியமிக்க துணிச்சலான பெண், இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவாள், இதெல்லாம் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது.
காமினியின் அம்மா பெண்ணியம் பற்றி கேட்கும்போதுகூட இதுதான் பெண்ணியம் என்று அவள் கூறவில்லை. இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றது. காமினி என்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்கிறது என்பதைக் காட்டுவது இப்படம். அதைதவிர பெண்ணியத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன்” என்றார்.