’கிரீடம்’ படத்தில் இடம்பெற்ற ‘அக்கம் பக்கம்’ பாடல், அதேபோல் ’மதராசபட்டினம்’ படத்தில் 'பூக்கள் பூக்கும் தருணம்' , தாண்டவம் படத்தில் 'ஒரு பாதி கனவு நீயடி' என பாடல்கள் கொண்டாடப்பட்டதற்கு படத்தின் இசையைத் தாண்டி அதன் காட்சியமைப்புகளும் மிக முக்கியக் காரணம். அந்தப் பாடல்களைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலும் அதன் காட்சிகள் கண் முன்னே வந்துசெல்லும். அந்த அளவிற்கு ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருப்பார் ஏ.எல்.விஜய்.
தமிழ் சினிமாவில் ஒருசில இயக்குநர்கள் தனது மனநிலையை ஒட்டியே படத்தை இயக்குவார்கள். அதேபோன்ற இயக்குநர்தான் விஜய். சினிமா பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்தவர். திரைப்பட தயாரிப்பாளர் அழகப்பனின் மகன் என்னும் அடையாளத்தோடு அவர் சினிமாவில் காலெடுத்து வைக்கவில்லை. அதற்கு முன்பே விளம்பரத்துறையில் சாதித்துவிட்டார்.
![AL vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3595345_amyjackson.jpg)
விளம்பரங்கள் தான் இவரது சினிமாவிற்கு தொடக்கப் புள்ளி. 10 வினாடிகள் வரும் விளம்பரத்தில் தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்துவதில் விஜய் வல்லவர். சினிமா மீது ஏற்பட்ட காதலால் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இணைந்தார். அங்கிருந்து மேலும் சில இயக்குநர்களிடம் சினிமா கற்று, 2007ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கினார்.
முதல் படமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் உடன் அமைந்தது. ‘கிரீடம்’ திரைப்படம் விஜய்யின் திரையுலக கனவுக்கு ஆரம்பப்புள்ளியாய் இருந்தது. கனவைத் தேடி ஓடும் இளைஞனின் கதை. ராஜ்கிரண் - அஜித் இருவரின் அப்பா மகன் செண்டிமெண்ட் சீன்கள் ரசிகர்களை கலங்க வைத்தது. 'தவமாய் தவமிருந்து' தாண்டி தந்தை கதாப்பாரத்தில் ராஜ்கிரண் வெளிப்படுத்த என்ன இருக்கிறது என எண்ணியவர்களுக்கு தனது சாந்தமான அணுகுமுறையால் மகனை அடிக்க மனமில்லாமல் மனதில் கஷ்டப்பட்டுக்கொண்டு கடந்துபோகும் அப்பாவை தமிழ் சினிமா என்றும் மறக்காது.
![AL vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3595345_emyjack.jpg)
அடுத்ததாக ’மதராசபட்டினம்’ படத்தின் முதல் பார்வை வெளியானபோதே இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னணியில் நிறைய படங்கள் வந்துள்ளன. அதில் இவர் என்ன வித்தியாசம் காட்டிவிடப் போகிறார் என கேட்டவர்களுக்கு, காதல் காட்சிகளால் பதிலளித்தார்.
ஆர்யாவும் - ஏமி ஜாக்சனும் பேசிய வசனங்கள் இன்றும் ரசிகர்களுக்கு மனப்பாடம். நம்மை ஆண்டவர்கள், என்னென்ன வகையில் நம்மை துன்புறுத்தினார்கள் என சில காட்சிகளில் சொல்லிவிட்டு கடப்பார் இயக்குனர் விஜய். மதராசபட்டினத்தை திரையில் பார்த்தவர்கள் மிகநீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணீர் விட்டதாய் இன்றும் கூறுவார்கள். ஏமி ஜாக்சன் பேசும் 'மறந்துட்டியா' என்னும் வசனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
![AL vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3595345_madhrasa.jpg)
மதராசபட்டினம் படத்துக்குப் பிறகு விஜய், விக்ரம்-ஐ இயக்குகிறார் என தகவல்கள் வெளியானது. ’தெய்வத்திருமகன்’ என்ற பெயரில் வெளியாவதாய் இருந்த அத்திரைப்படம், சில சர்ச்சைகளால் ’தெய்வத்திருமகள்’ ஆனது.
’பிதாமகன்’ படத்தில்தான் விக்ரம் மிகச்சிறப்பாய் நடித்துள்ளார் என பேசியவர்களுக்கு பாலாவே பதில் சொன்னார், என்னைவிட விக்ரம்-ஐ மிகச்சிறப்பாய் ஏ.எல்.விஜய் பயன்படுத்தியுள்ளார் என்று....
![AL vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3595345_vikram.jpg)
தெய்வத்திருமகளின் இறுதிக் காட்சிக்கு ஜி.வி. பிரகாஷ் தனது இசையில் வசனம் எழுதியிருப்பார்.தியேட்டர்களுக்கு விசிட்டடித்த படக்குழுவை மக்கள் கண்ணீருடன் பாராட்டினார்கள். அங்கிருந்து தொடர்ந்து விக்ரமுடன் ’தாண்டவம்’ படம் வெளியாகிறது. திரில்லர் பின்னணியில் உருவான காதலர்களின் கதை. எளிமையான காதல் காட்சிகளால் ரசிகர்களை அனுஷ்கா கொள்ளையடிக்க காரணமாக அமைந்தார். அதில் வரும் ’ஒருபாதி கனவு நீயடி’ பாடலில் வரும் காட்சிகளை எவ்வாறு யோசித்தீர்கள் என ஒருமுறை கேட்டதற்கு, 'அந்த நிமிடங்களில் தோன்றியதுதான்' என பதில் கூறி ஆச்சரியப்படுத்தினார்.
![AL vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3595345_alvijayanushka.jpg)
அங்கிருந்து விஜய்யின் ’தலைவா’ மும்பையின் தாராவி பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி உருவான கதை. இன்றும் நடிகர் விஜய்-யின் மனதிற்கு மிகநெருக்கமாய் இருக்கும் படங்களில் தலைவா படத்துக்கு முக்கிய இடமுண்டு. தமிழ் சினிமா ரசிகர்களால் நன்றாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய படம், ஒரு சில நபர்களால் தடைப்பட்டு சரியான நேரத்தில் வெளியாகாமல் தோல்வியடைந்தது. இந்த அனைத்து படங்களிலும் மூன்று நபர்கள் ஏ.எல்.விஜய்யின் உடனே பயணித்திருப்பார்கள். அந்த மூவர் யார் என்றால் ஜி.வி. பிரகாஷ் குமார், நா.முத்துக்குமார், நீரவ் ஷா.
ஒவ்வொருவரிடத்திலிருந்தும் சிறந்த ஒன்றை வெளிக்கொண்டு வருவதில் இயக்குநர் விஜய் கெட்டிக்காரர். நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து சேர்ப்பேன் அன்பே ஓர் அகராதி, வார்த்தை தேவையில்லை... வாழும் காலம் வரை... பாவை பார்வை மொழி பேசுமே, இரவு வரும் திருட்டு பயம்... கதவுகளை சேர்த்துவிடும்... கதவுகளை திருடிவிடும் அதிசயத்தை காதல் செய்யும், என் தோளைத் தாண்டி வளர்ந்ததினால் என் தோழன் நீயல்லவா என விஜய்க்கு தனித்துவமான வரிகளை முத்துக்குமார் கொடுத்தார்.
அதேபோல்தான் ஜி.வி.யின் இசையும்... மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் என மிகச்சிறந்த இசையை விஜயால் வாங்க முடிந்தது.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஏ.எல்.விஜய் படங்களுக்கு வண்ணம் சேர்த்தன, அதில் ஏ.எல்.விஜய்யின் பங்களிப்பும் இருந்தது.
![AL vijay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3595345_alvijay.jpg)
இயக்குநர் விஜய் என்றால் சினிமா ரசிகர்கள் மனதில், இந்த ஆள் நம்மை ஏமாற்றமாட்டார் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். ஆம், அன்பை மொழியாக்குவதில் விஜய் என்றும் வல்லவர். உலகம் முழுதும் தற்போது தேவைப்படும் அன்பை மொழியாக்கி காட்சிப்படுத்தும் இயக்குநர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.