போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. கரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால் இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராத காரணத்தால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டுவந்தனர்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து, முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி என பல தரப்பினரிடம் ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்க அந்தக் காணொலியும் சமூக வலைதளத்தில் வைரலாகிவந்தது.
மதுரை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டினர். ஒரு கட்டத்தில் கடவுள் முருகனிடமே 'வலிமை' அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அளித்தனர். இதனால் கடுப்பான அஜித் அறிக்கை விடும் அளவிற்கு இப்பிரச்னை பெரிதானது.
இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என பதிவிட்டிருந்தார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளியப்படுத்தினர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலஜியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பழனிசாமியிடம் அஜித் ரசிகர்கள் சிலர் 'வலிமை' அப்பேட் கேட்டனர்.