அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். தற்போது வரை படம் குறித்தான அப்டேட் கேட்டே அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகன்றனர். அஜித் சில வாரங்களுக்கு முன்னர் பைக்கில் லாங் ட்ரைவ் தொடங்கினார். தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுடன் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டன.
இடையே, சாலையோர உணவகம் வைத்திருப்பவரின் மகன் படிப்புச் செலவை அஜித் ஏற்றிருப்பதாகச் செய்தி மட்டுமே வெளியானது. தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு அஜித் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தன்னுடன் பயணித்த அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் அஜித்துடன் ட்ராவல் செய்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும் அதில் அவர், அஜித் சென்னை - கோவை -சென்னை - ஹைதராபாத் - வாரணாசி - காங்டாக் - லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை என 10 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித். சுத்தமான தங்கம்” என்று பதிவிட்டுள்ளார்.