ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, பூர்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தலைவி’. விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் பணிபுரிந்த எழுத்தாளர் அஜயன் பாலா, தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என வருத்தத்தோடு கருத்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “சினிமாவில் நம்பிக்கை துரோகத்தை பலமுறை சந்தித்திருந்தாலும், தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை.
நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து, கோர்ட் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்தியதோடு, அந்ச வழக்கில் வெற்றி பெற்ற பின்பு என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.
வணிகநோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம், பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன்.
இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு, எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவரம் என ஒன்றரை வருட என் உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகுக்குத்தல்தான்.
இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போது கூட இதுபற்றி வாய்திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார் போல. இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கி கொடுக்கமாட்டார்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் ஒப்பந்தமில்லாமல் யாரும் பணிபுரிய வேண்டாம்.
இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக் கொள்ளும் கோரிக்கை” என்று குறிப்பிட்டிருந்தார். இப்பதிவைப் பார்த்த தலைவி படத் தயாரிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பிரச்னையை பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பதிவை நீக்கியிருப்பதாகவும் எழுத்தாளர் அஜயன் பாலா பதிவிட்டுள்ளார்.