திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டப்பட்டுவில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய கலைத்திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஆர்ஜே விக்னேஷ்காந்த் வருகை தந்தார். அவருக்கு கல்லூரி மாணவி ஒருவர் அவரது உருவத்தை வரைந்து அன்பளிப்பு வழங்கினார்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆர்ஜே விக்னேஷ்காந்த் பேசியதாவது:
உலகத்தில் இரண்டே இரண்டு விஷயத்துக்குதான் உருவாக்கக்கூடிய தன்மை இருக்கிறது. ஒன்று பெண்ணுக்கு, இன்னொன்று மண்ணுக்கு. அப்படிப்பட்ட இந்த மண்ணைப் பொன்னாக்கக் கூடிய உங்கள் மத்தியில் பேசுவது பெருமையாக இருக்கிறது.
1950இல் உணவு பற்றாக்குறை இருந்தது. அப்படி ஒரு கட்டத்தில் இருந்து இன்றைக்கு வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலமாக இந்திய நாடு தன்னுடைய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த எழுபது வருடங்களில் இது மிகப் பெரிய விஷயம்.
பாசிட்டிவ்வாக விவசாயத்தை பற்றி பேச ரொம்ப ஆசையா இருக்கு. ஏனென்றால், இப்போது வரக்கூடிய அனைத்து படங்களிலுமே விவசாயம் அழிந்துவிட்டது, விவசாயம் அழிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு சூழல் நடக்க வாய்ப்பே இல்லை. சாப்பிடுவதை நிப்பாட்டிவிட்டோமா. நான் ஒரு நாளைக்கு ஏழு, எட்டு தடவைக்கு மேல் சாப்பிடுகிறேன். அப்பிடியிருக்கையில் எப்படி விவசாயம் அழியும்.
தவறான விவசாய முறைகளினால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. விவசாயம் அழிந்துவிட்டது என்று சொல்லவே சொல்லாதீர்கள். விவசாயத்தை சரியாக செய்தால், உலகிலேயே அதிக லாபத்தை தரக்கூடியே தொழில் என்பதை உணர்வீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்மைல் சேட்டை என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகத் தோன்றியுள்ளார்.
அத்துடன் சென்னை 600028 இரண்டாம் பாகம், மீசையை முறுக்கு, தேவ், நட்பே துணை உள்ளிட்ட சில படங்களிலும் காமெடி வேடங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இருளர் பழங்குடியினர் பாடலால் பிரபலமான நஞ்சம்மாள் பாட்டி