அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் சாட்டை திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற படம் உருவாகி உள்ளது. இப்படத்திலும் சாட்டை படத்தில் நடித்திருந்த சமுத்திரகனி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை பிரபு திலக் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில், சமுத்திரகனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, காவல் துறை அலுவலர் ஈஸ்வரன், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
அப்போது சமுத்திரகனி பேசுகையில், ‘சாட்டை' படத்தில் நானும் தம்பி ராமையாவும் நன்றாக நடித்திருந்தோம். படமும் ஹிட். அப்படத்தில் நடித்ததற்காக நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் அந்தப் படத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் கோடிகோடியாக சம்பாதித்துவருகின்றனர். அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.
ஆசிரியர் பகவான் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் ’அடுத்த சாட்டை’ என்றார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் அன்பழகன் பேசுகையில், ”சாட்டையில் பள்ளி மாணவர்களின் பிரச்னை குறித்து கூறியிருந்தோம். அடுத்த சாட்டையில் கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிதான் கதைக்களம்.
இதில், அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பிரச்னை, வாழ்க்கை முறையை கூறி உள்ளோம். மாணவர்களை தனியார் கல்லூரி வியாபாரப் பொருளாக பார்க்கிறது. சாட்டை போலவே இப்படமும் வரவேற்பு பெறும் என நம்புகிறோம்” என்றார்.