தெலுங்கில் வெளியாகி மெகாஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் 'ஆதித்யா வர்மா' என்பது பலரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார். பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.
இயக்குநர் கிரிசாயா பேச்சு:
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில், தான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியதாக கூறினார். ஆனால் தனக்கு முதல் அங்கீகாரம் தமிழ் திரைத்துறையில்தான் கிடைத்துள்ளது என்று கூறிய அவர், தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
இசையமைப்பாளர் ரதன் பேச்சு:
இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், தன் பெயர் வித்தியாசமாக இருந்ததனால், தன் தாய்மொழியை தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் தமிழன் என்று கூறினார். இந்த மேடையில் தான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான் என்று கூறிய ரதன், தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே என்றும் கூறினார்.
நடிகை பனிதா பேச்சு:
படத்தின் கதாநாயகி பனிதா, நடிகர் விக்ரமுக்கு கடன்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் நடிகர் துருவின் திரைப் பயணத்தின் துவக்கத்தில் தான் இருப்பதற்கு மிகவும் பெருமை படுவதாகவும் கூறினார்.
நடிகர் துருவ் விக்ரம் உரை:
படத்தின் நாயகன் துருவ் விக்ரம் பேசுகையில், தனது குடும்பம் இந்த விழாவில் பங்கு கொண்டதால் தனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த படக்குழுவிற்கு நன்றி தெரிவித்த துருவ், இயக்குனர் கிரிசாயா, படக்குழுவினரை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறினார். மேலும் தனது தந்தை நடிகர் விக்ரமை நினைவுக்கூர்ந்த துருவ், இந்த படத்திற்காக தனது தந்தை 100 சதவித அர்ப்பணிப்பை கொடுத்திருப்பதாக தெரிவித்தார். ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள மனிதர் என்றும் கூறினார்.
நடிகர் விக்ரம் உரை:
இதைத்தொடர்ந்து மேடையில் நடிகர் விக்ரம் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில், துருவைப் போல தனக்குப் பேச தெரியாது என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது 'சேது' திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ, தான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை எனக் கூறிய விக்ரம் இன்று மட்டுமல்ல, சில காலமாக தான் பதற்றமாக இருப்பதாக தெரிவித்தார் .
இதையும் படிங்க: 'அசுரன்' தனுஷுக்கு மைதா மாவின் வாழ்த்து!