கடந்த ஆண்டு வெளிவந்த ’செம போத ஆகாத’ என்றத் திரைப்படம் நடிகர் அதர்வாவின் சொந்தத் தயாரிப்பில் வெளியானது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை மதியழகன் என்பவர் 5.5 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளார்.
இந்நிலையில், படம் வெளியாக தாமதமானதால் 5.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக அதர்வாவிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காததால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டதாகவும் மதியழகன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது, இழப்பீடாக பணமில்லாமல் படம் நடித்துத் தருவதாகக் கூறி ஒப்பந்தத்தில் அதர்வா கையெழுத்திட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பின்னர், ’மின்னல் வீரன்’ என்ற படம் அதர்வாவை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்தையும் அதர்வா முடித்துத்தராமல் ஏமாற்றியதாகவும் மதியழகன் தெரிவித்துள்ளார். இதனால் 6 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதால், இழப்பீட்டுத் தொகையை கேட்டபோது 3 மாதத்தில் தருவதாக அதர்வா கூறினார். ஆனால் ஓராண்டாகியும் பணம் தராததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ள மதியழகன், பணத்தை ஏமாற்றிய நடிகர் அதர்வா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.