சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் பால் என்பவரை ஜூன்27ஆம் தேதி நடிகை வனிதா திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து நடிகை வனிதாவிற்கு ஒரு தரப்பினர் பாராட்டுக்களை அளிக்க, மற்றொரு தரப்பினர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், சூர்யா தேவி என்பவர் சமூக வலைதளத்தில் வனிதா விஜயகுமார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜூலை 7ஆம் தேதி போரூர் காவல் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகார் ஒன்றை அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அதுகுறித்து கேட்பதற்காக இன்று (ஜூலை 14) தனது வழக்கறிஞருடன் போரூர் காவல் நிலையத்திற்கு வந்தார்.
அந்தப் புகார் குறித்து காவல் துறையினருடன் கேட்டறிந்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ”கரோனா காலம் என்பதால் இரண்டு நாள்களில் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் குறித்த தகவல்களை அளித்துள்ளோம். இதுபோன்ற அவதூறு பேச்சுக்களால் எனது மகன் மிகவும் மனமுடைந்துள்ளான் எனக் கூறுகின்றனர். ஆனால் அப்படியில்லை, என் குழந்தைகளை நான் மன தைரியத்துடன் வளர்த்துள்ளேன்.
எனக்கு 40 வயதாகுகிறது, எனக்கு ஒரு துணை தேவைப்பட்டதால் நான் திருமணம் செய்து கொண்டேன். இதனை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம். கொஞ்ச காலத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். யூ-டியூப் சேனல் நடத்தினால் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதுபோன்று அவதூறு பரப்புவது சரியல்ல. அவர்களின் வாழ்க்கையையும் இது பாதிக்கும்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்தப் புகார் குறித்து வழக்கறிஞர் ஸ்ரீதர் தெரிவிக்கையில், “வனிதா விஜயகுமார் குறித்து அவதூறாகப் பேசிய பெண் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளோம். அந்தப் பெண் ஒரு கஞ்சா வியாபாரி. இதற்கு முன் ஏற்கனவே சில அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியுள்ளார். அதுகுறித்த ஆதாரங்களும், வீடியோ பதிவுகளும் எங்களிடம் உள்ளன. அதனைக் காவல் துறையிடம் சமர்ப்பிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளாகும் வனிதாவின் திருமணம்