சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவைச் சேர்ந்தவர் அபிநய வெங்கடேஷ கார்த்திக் (36). நடிகை வாணி ஸ்ரீயின் மகனான இவர், மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்கு உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி செய்து வந்தார். சமீப காலமாக கரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் பெங்களூருவில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மன உளைச்சலில் அவர் தவித்து வந்துள்ளார்.
இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் சொந்த பங்களா உள்ளது. அதில் அவரது தகப்பனார் கருணாகரன் மட்டும் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே 6ஆம் தேதி அன்று அபிநய் தனியாக கார் ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு சிறப்பு பாஸ் பெற்று திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்துக்கு வந்தார். தனக்கு நோய்த் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள பாரம்பரிய பங்களாவில் தனது தந்தையாருடன் தங்கியிருந்தார். சென்னைக்கு மிக அருகாமையில் இருந்து வெகு நாள்களாக தனது குடும்பத்தாரையும் மனைவியும் சந்திக்க முடியாததால் இவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் (மே 21) அதிகாலை 6 மணியளவில் தனது பங்களாவின் பின்புறம் இருந்த ஒட்டு வீட்டு கூரையில் தான் உடுத்தியிருந்த வேட்டியை அவிழ்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் காவல்துறை உதவி ஆய்வாளர் வெங்கடேசன், காவல்துறையினர் விரைந்துச் சென்று சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அபிநய வெங்கடேசுக்கு ஏற்கனவே மன உளைச்சல் இருந்ததாகவும் அதற்கு உரிய மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் தெரியவந்தது. தற்போது ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாததால் அவருக்கு மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. தொற்று பரவும் என்ற பயத்தால் பெங்களூருவில் இருந்து நேராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது மனைவி, குழந்தைகளை பார்க்கச் செல்வதை தவிர்த்து நேராக ஆனூர் கிராமத்துக்கு வந்துள்ளார். இங்கிருந்து சென்னைக்கு செல்வதாக முடிவு செய்திருந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க... கமல் ஹாசனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்