தமிழ் சினிமா 80-களின் கனவு ராணி நடிகை ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டி என்ற கிராமத்தில் 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி அய்யப்பன்-ராஜேஸ்வரி என்ற தம்பதிக்கு மகளாகப் பிறந்த இவர், நான்கு வயதில் துணைவன் என்ற படத்தின் மூலம் திரைத் துறையில் தனது கால்தடத்தைப் பதித்தார்.
தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியாக வலம்வந்த ஸ்ரீதேவி. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். அப்படத்தின் மூலம் நற்பெயர் பெற்ற அவர், இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த ’மயிலு’ என்ற கதாபாத்திரம், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டி எங்கும் கொடிகட்டிப் பறந்தது.
இந்தியில் ஸ்ரீதேவி
இப்படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாரதிராஜா, ஸ்ரீ தேவியை பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்துவைத்தார். அப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாகக் கோலோச்சத் தொடங்கினார். இந்தியில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் கொடிகட்டிப் பறந்தார்.
அப்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும்போது, பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் பொண்ணு ஸ்ரீ தேவிபோல இருக்கணும்னு சொல்வார்கள். அது இன்றளவும் தொடர்கிறது என்றால் அது அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது என்பதையே எடுத்தியம்புகிறது.
அனைவரையும் கவரும் நடிகை
அனைவரையும் ஈர்க்கக்கூடிய முகத்தோற்றம் கொண்ட இவர், தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்திலும் ரசிகர்களை ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருப்பார். 300 படங்களில் நடித்த இவருடன் தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய்கூட இவருடன் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தில் ஆழப்பதிந்த நடிகை ஸ்ரீதேவியின் 58ஆவது பிறந்தநாளை, அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். எத்தனை பேர் வந்து சென்றாலும் கலையுலகப் பயணத்தில் என்றுமே ஸ்ரீதேவி கனவு ராணிதான்.