நடிகை சில்க் ஸ்மிதா ,1960ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பெலுருவில் வருமையின் பிடியிலிருந்த ஒரு ஏழை குடும்பத்தில் முதல் பெண்ணாய் பிறந்தார். அவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் தமிழ் திரை உலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராக தனது பயணத்தை துவங்கினார்.
அதன் பின்னர் நடிகரும் இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகுமார் நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரின் பெயர் சில்க் ஸ்மிதா, அந்த கதாபாத்திரத்தின் பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. வண்டிச்சக்கரம் மூலம் தொடங்கிய அவரது கலைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடன மங்கையாக நடித்து புகழ் பெற்றார்.
![கவர்ச்சி கன்னி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13792233_silks.jpg)
சினிமா துறையில் புகழ்
தான் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமின்றி பல குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கவும் முடியும் என்று மூன்றுமுகம் , மூன்றாம் பிறை, கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நிரூபித்தவர் .
![சில்க் ஸ்மித்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13792233_silk-xda.jpg)
ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் கூட சில்க்கின் ஒரு பாடலாவது இணைத்தால்தான் படத்தை வாங்குவோம் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்ததால் நடிகர் ரஜினிகாந்த், கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களும் அவர் கால்ஷீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு சினிமா துறையில் புகழ் அடைந்தார் சில்க் ஸ்மிதா.
கிசுகிசுக்களை புறம்தள்ளிய நாயகி
![சில்க் ஸ்மித்தா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13792233_silk.jpeg)
அபார நடனத்திறமையும் , கண்களின் வசீகரமும் கொண்டு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட பட உலகிலும் ஒரு அழியாத வரலாற்றை படைத்த சில்க் ஸ்மிதா. தன்னைப் பற்றிய கதைகளையும் கிசுகிசுக்களையும் புறம்தள்ளி பல இன்னல்களுக்கு நடுவே வாழ்ந்தார்.
1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் தேதி சினிமா ரசிகர்களுக்கு அவர் அதிர்ச்சியளித்தார். சிலுக்கின் ரசிகர்கள் மனதில் மீளாத்துயரம் குடிகொண்ட நாள் அது, ஆம் கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் தமிழ் திரையுலகின் வசீகரப் பேரழகி சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார்.
![காந்த கண்ணழகி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13792233_silk-xd.jpg)