சென்னை: 'புன்னகை மன்னன்' முத்தக் காட்சி குறித்து முன்னரே தெரிவித்திருந்தால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன் என்று நடிகை ரேகா கூறியிருக்கிறார்.
பிரபல இணையதளம் ஒன்றுக்கு முன்னாள் ஹீரோயின் நடிகை ரேகா பேட்டி அளித்தார். அப்போது, 'புன்னகை மன்னன்' படத்தில் கமல்ஹாசன் தனக்கு எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்த சம்பவம் பற்றி நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் இந்தச் சம்பவம் பற்றி நூற்றுக்கும் மேற்பட்டமுறை பல பேட்டிகளில் கூறியிருக்கிறேன். 'புன்னகை மன்னன்' படத்தில் குறிப்பிட்ட அந்த முத்தக் காட்சி பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டது. படத்தின் கதைப்படி அந்த முத்தக் காட்சி மிகவும் அவசியமானது. படத்தில் பார்க்கும்போது அக்காட்சி அசிங்கமாவும், முரட்டுத்தனமாகவும் இருக்காது. ஆனால் அப்போது நான் சின்னப் பெண்ணாக இருந்ததால் எனக்கு இந்தக் காட்சி எடுப்பது பற்றி சொல்லவில்லை.
இயக்குநர் பாலசந்தர், கமலை கண்ணை மூடிக்கொள்ள சொல்லி, நான் உன்னிடம் சொன்னதை நினைவில் வைத்துக்கொள். சரியா? என்று தெரிவித்தார்.
நாங்கள் இருவரும் 1,2,3 என்று எண்ணியபின் குதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அப்போது கமல் திடீரென எனக்கு லிப்-லாக் கொடுத்தார். பின்னர் நாங்கள் இருவரும் குதித்தோம். இந்தக் காட்சியை திரையரங்கில் பார்த்தபோது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தேன்.
இந்தக் காட்சிக்கு பின்னர் அடுத்த காட்சியை வேறொரு லொக்கேஷனில் படமாக்க புறப்பட்டோம். அப்போது உதவி இயக்குநர்களான சுரேஷ் கிருஷ்ணா, வசந்த் ஆகியோரிடம் கமல் எனக்கு முத்தம் கொடுப்பார் எனச் சொல்லவில்லை. இதை சொல்லியிருந்தால் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன் என்றேன்.
இதற்கு, சினிமாவில் இருக்கும் ஒரு பெரிய நடிகர் உங்களுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். முதலில் இதை சென்சார் அனுமதிப்பார்களா என்று பார்ப்போம் என்றார்கள். அதற்கு சென்சார் என்றால் என்ன என அப்பாவியாக கேட்டேன்.
கமல்ஹாசனுக்குத் தெரிந்தும், எனக்கு தெரிவிக்கப்படாமலும் எடுக்கப்பட்ட இந்த முத்தக் காட்சி குறித்து நான் பேட்டிகளில் சொன்னபோது பலரும் நம்பவில்லை. தற்போது இயக்குநர் பாலசந்தர் உயிருடன் இல்லை. எனவே அந்தப் படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இது தெரிந்த விஷயம்.
இப்படியொரு காட்சி என்னிடம் சொல்லாமல் எடுத்ததற்காக பாலசந்தரோ, கமல்ஹாசனோ என்னிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் 'புன்னகை மன்னன்' படம் சூப்பர் ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து எனக்கு வாய்ப்புகள் குவிந்தன. நான் பிஸியான நடிகையாக மாறினேன்.
இருந்தபோதிலும் முத்தக் காட்சி பற்றி முன்னரே என்னிடம் தெரிவித்திருந்தால், அதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன். இந்தக் காட்சி எதிர்பாராதவிதமாக எடுக்கப்பட்டது. இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இது முடிந்துபோன விஷயம். மீண்டும் அதுபற்றி பேசவிரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
1980களின் இறுதியிலும், 1990களின் தொடக்கத்திலும் முன்னணி ஹீரோயின்களுள் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரேகா.
1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் மீண்டும் 2002இல் வெளியான 'ரோஜாக் கூட்டம்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இதைத்தொடர்ந்து அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்துவருகிறார்.