கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த யுவராஜ் சுவாமி யாதவ். பிரபல ஜோதிடரான இவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து இது தொடர்பாக புகார்கள் வந்தததைத் தொடர்ந்து ஜோதிடர் யுவராஜ் சுவாமி யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகாவுக்கு ரூ.1.25 கோடி அவர் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனடிப்படையில், ராதிகாவுக்கு மத்திய குற்றப் பிரிவு காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அளித்துள்ள ராதிகா குமாரசாமி, “என் தந்தையின் நண்பரான சாமியார் யுவராஜ், எங்கள் குடும்பத்துடன் 17 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்துவருகிறார். அவர் என் குடும்ப ஜோதிடரும் கூட. இதனால் அவர் மீது எனக்கு மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல மரியாதை உள்ளது.
நான் அவரிடமிருந்து பணம் பெற்றது உண்மை தான். அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலமாக 'நாட்டிய ராணி சாந்தலா ' என்ற பெயரில் சரித்திரப் பின்னணிக்கொண்ட திரைப் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டிருந்தார். அதனை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவெடுத்திருந்தோம். நான் அவரது நிறுவனம் அல்லது என்னுடைய நிறுவனத்தின் கீழ் தயாரிக்க அறிவுறுத்தினேன்.
அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டுமென விரும்பினார். இதில் நடிக்க எனக்கு முதல்கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பினார். பிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பியிருந்தார். அவர் எனக்கு ரூ. 1.25 கோடி தந்ததாகக் கூறுவது பொய். இந்த நிதியானது, வெறும் சினிமா தொடர்புடையது, அவ்வளவு தான்.
அவருடன் எனக்கு வேறெந்த தொடர்பும் இல்லை. அவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுவரை நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாங்கள் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. அவருக்கு பெரிய நபர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் நாங்கள் அவருடன் தொடர்பில் இருப்பது என்பது ஒரு சிறிய விஷயம். நான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த தவறும் செய்யவில்லை.
என் மீது வந்த புகாருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளேன். எனது சகோதரர் வங்கி கணக்கிற்கு பணம் எதுவும் வரவில்லை” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிசிபி இணை ஆணையர் சந்தீப் பாட்டீல், “நடிகை ராதிகாவின் அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஈஸ்வரன் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு