சென்னை : சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் நடிகை மீரா மிதுனை எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான 2ஆவது வழக்கில் நாளை (ஆக.26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
மீரா மிதுன் மீது புகார்
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன், கடந்த 15ஆம் தேதி எம்கேபி நகர் காவல் நிலையத்தில் நடிகை மீரா மிதுன் மீது கடந்த 2020ஆம் ஆண்டு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் எனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
4 பிரிவுகளில் கீழ் வழக்கு
அதன்பேரில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. பட்டியலினத்தோர் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுக்க எம்கேபி நகர் போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால் கைது நடவடிக்கை எடுப்பதற்காக எம்கேபி நகர் போலீசார் எழும்பூர் 10ஆவது நீதிமன்றத்தில் இன்று (ஆக.25) கைது வாரண்டு பெற்றனர்.
இதையடுத்து எம்கேபி நகர் போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்துள்ளனர். அதற்கான வாரண்டை புழல் சிறையில் கொடுத்துள்ளனர். இந்நிலையில், நாளை காலை எம்கேபி நகர் போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுப்பதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதையும் படிங்க : சிறைக்குள் அதிசயம், உல்டா சந்திரமுகியான மீரா மிதுன்