சமீபத்தில் நடந்துமுடிந்த சென்னை - கொல்கத்தா ஐபிஎல் போட்டியை விமர்சிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நடிகர் எம்ஜிஆர் லதாவை தடவியதைப் போல தடவுகிறார்கள்' என பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த ட்வீட் குறித்து பழம்பெரும் நடிகை லதா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் எம்.ஜிஆரையும், தன்னையும் தவறாக சித்திரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக லதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 50 ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கும் தான், இப்போதுவரை தனக்கென ஒரு மரியாதையை தக்க வைத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ள லதா, ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமாக மதிக்கும் கோடானுகோடி ரசிகர்களை ஒட்டு மொத்தமாக மன வருத்தப்படச் செய்யும் வகையில் இப்படி எழுதலாமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
கஸ்தூரி நடித்த அளவுக்கு தான் எந்தப் படத்திலும் விரசமா நடிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள லதா, கஸ்தூரிக்கு கருத்து சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டால், அவர் நடித்த படத்திலிருந்தே சொல்லியிருக்கலாமே? எனவும் கேட்டிருக்கிறார்.
எதற்கெடுத்தாலும் பெண்ணியம் அது இது என்று கருத்து சொல்லும் கஸ்தூரி, இன்னொரு பெண்ணை பொதுவெளியில் அவமானப்படு்த்தும் வகையில் பேசலாமா? எனக் கேட்டுள்ள லதா, கஸ்தூரியின் செய்தது ச்சீப்பான பப்ளிசிட்டி தேடும் செயல் என விமர்சித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டுக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்டும் மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.