80களில் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையைாக வலம்வந்தவர் நடிகை குஷ்பு. இவரது பெயரைக்கேட்டால் தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகம்வரும். தமிழ் ரசிகர்கள் குஷ்பு மீதுள்ள அதீத பாசத்தை வெளிக்காட்ட அவருக்கென்று கோயில் கட்டி அசத்தினர்.
இவ்வாறு, தமிழ் மக்களின் மனதைக்கொள்ளையடித்த குஷ்பு இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய குஷ்பு சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துவந்தார்.
இந்நிலையில், அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட குஷ்பு திமுகவில் இணைந்தார். கருத்து வேறுபாடு காரணமாக திமுகவை விட்டு விலகி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும், அரசியல் சார்ந்த கருத்துகள் தெரிவிப்பதில் பாரபட்சம் பார்க்காமல் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துவருகிறார்.
இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிக பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில், 'இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. என்னை தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.