சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை. நான் வேறு கட்சியில் இருந்தாலும் அவர் எனக்கு முதலமைச்சர் தானே. நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து கூறியுள்ளேன்.
வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கப் போகிறது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்கப் போகிறோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களுக்குத் தான் தெரியும். பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றம் கிடையாது.
தமிழ்நாட்டில் பெரியாரை மிகப்பெரிய தலைவராக அனைவரும் கொண்டாடுகின்றனர். ஒரு அரசியல் வட்டத்திற்குள் பெரியாரை அடைக்காமல் எல்லாரும் மாலை போடலாம். பெரியாரை அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை. வதந்திக்கும் எனக்கும் தூரத்து சொந்தம் கிடையாது. ஆனால், பக்கத்து சொந்தம். வதந்திகள் எனக்குப் பழகிவிட்டன. வதந்திகளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக 10 மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்!