சென்னை: உலகம் முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ் திரை பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சத்தியராஜ், த்ரிஷாவை தொடர்ந்து தற்போது நடிகை குஷ்புவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திரை உலகில் மட்டுமில்லாமல் அரசியலிலும் களமிறங்கியவர் நடிகை குஷ்பு. கடைசியாக அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிக்கு முறைப் பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறுதியாக கரோனா என்னை பிடித்து விட்டது, இரண்டு அலைகளில் தப்பித்தேன், மூன்றாவது அலையில் சிக்கியுள்ளேன். சளி அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டேன், தற்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த தனிமையை வெறுக்கிறேன்", என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் பாஜக சார்பில் பஞ்சாப் அரசைக் கண்டித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் குஷ்பு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நடிகை ஷோபனாவிற்கு ஒமைக்ரான் பாதிப்பு!