தமிழில் 'சார்லி சாப்ளின்',' விசில்' உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி ரகுராம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சினிமாவைத் தொடர்ந்து அரசியலில் பாஜக கட்சியில் இணைந்து ஆதரவு தெரிவித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக இன்று அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. தொண்டர்களை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. அதனால் கட்சியில் உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது.
சினிமாவைவிட, அரசியலில் நடிகர்கள் அதிகம் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.
அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே காயத்ரி ரகுராமுக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கும் கருத்துவேறுபாடு இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.