தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார். இதனையடுத்து பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் இதனை எதிர்த்து தேர்தலை நிறுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கும் நடிகர் சங்கத்தில் 61 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியது தவறு எனக் கூறி பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை ஏழு மணிக்கு சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 198 நடிகர், நடிகைகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'ஒருவரால் பிரச்னை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு தரப்பட்ட பதவி சாதாரண பதவியல்ல. எல்லோரையும் குஷிப்படுத்த வேண்டும் என்றால் ஐஸ்கிரீம் கடைதான் வைக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து நடிகை குஷ்பூ, பூர்ணிமா, அம்பிகா, ராதா, பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா உள்ளிட்டோரும் வந்து வாக்களித்தனர்.